Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அரசுக்கு அவ்ளோ பதட்டம்.. பெரியார் பிறந்தது சனிக்கிழமையா? பிழைகளுடன் அறிக்கை.. அண்ணாமலை பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசு பல பிழைகளுடன் அறிக்கை வெளியிட்டுள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பாடத்திட்டத்தைச் அறிமுகப்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்திருந்தார். வரும் கல்வி ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக உத்தரப் பிரதேச மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசும் தற்போது பள்ளிப் பாடத்திட்டத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்திருந்தார்.

BJP Annamalai retaliates tn governments statement

மேலும் பிரதமர் மோடி கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை படிப்படியாக தமிழகத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தாய்மொழியை அடிப்படையாகக் கொண்ட மும்மொழி கல்விக் கொள்கையையும் விரைவில் தமிழகத்தில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பதிவுக்கு தமிழக அரசு அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளது.

அதில், அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு, செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது என்றும் தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக பல பிழைகளுடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பெரியார் பிறந்த நாளே தவறாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே தமிழக பாஜக கொண்டிருக்கும் விருப்பம். அதன்படி, உலகத் தரத்திலான, தொலை நோக்குச் சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முழு பலன்களும் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப் பாடத்திட்டங்களை எதிர்ப்பதுபோல நாடகமாடிவிட்டு, படிப்படியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ பரிந்துரைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி வரும் திமுக அரசுக்கு, தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றி கூறியிருந்தோம். எங்கே தங்கள் வேஷம் கலைந்து மக்களுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பதட்டத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியாக திமுக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

சமீப காலமாக, திமுக கட்சியின் பெயரில் வெளிவர வேண்டிய அறிக்கைகள் எல்லாம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பெயரில் வெளிவருவதில் பெரிய ஆச்சரியமில்லை. இன்னும் சில நாட்களில், திமுக கட்சி உள்விவகாரங்களான, பிரியாணி கடையில் தகராறு செய்த திமுக நிர்வாகி, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் கூட, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வழியே மக்களுக்கு அறிவிக்கப்படலாம். திமுகவின் அதிகார துஷ்பிரயோகங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல.

அறிக்கையில் பல பிழைகள் இருப்பதைக் கூடக் கவனிக்காமல் அவசரகதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து 2018 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டிற்கான தேசியக் கல்விக் கொள்கை மாதிரி வடிவத்தில் குறிப்பிடப்பட்டு, பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை வெளியிடப்பட்டது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான்.

தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் முன்பாக தமிழகத்தில் இதற்கான கொள்கை உருவாக்கினோம் என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பது பொய் என்பது இதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. தங்கள் அறிக்கையில் மாதத்தைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டால் மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்து விட்டீர்களா?

கேள்விக்கு நேரடி பதில் சொல்ல முடியவில்லை என்றால், பழம்பெருமை பேசுவது திமுகவுக்கு வழக்கம். பெரியார் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற 1970 ஆம் ஆண்டு என்பதற்குப் பதிலாக 1920 ஆம் ஆண்டு என்று மற்றொரு பிழை அறிக்கையில் இருக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரிக்கு ஐபிஎம் 1620 கணிப்பொறி வாங்கப்பட்ட ஆண்டு 1963. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970 ஆம் ஆண்டு, பெரியார் செல்லும்வரை, அந்தக் கணிப்பொறி புதியதாக இருந்தது என்று திமுக கூறுகிறதா? பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17, 1879 அன்று புதன்கிழமை ஆகும். அவர் பிறந்த நாள் சனிக்கிழமை என்று கணிப்பொறி கூறியதாக மற்றுமொரு பிழை அறிக்கையில் இருக்கிறது.

1967 ஆம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. திறமை வாய்ந்த தமிழக இளைஞர்கள் மூலம், தமிழகம் இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது.

இனியாவது நிர்ப்பந்தங்களுக்குப் பயந்து அவசரகதியில் தவறான தகவல்களுடன் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று திமுக அரசைக் கேட்டுக் கொள்வதோடு, புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக மாணவர்களுக்குக் கொண்டு செல்வதற்காக, தமிழ்நாடு பாஜக சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+