சசிகலாவை இயக்குவது யார்? பாஜகவா? அதிமுகவில் மீண்டும் ரீ என்ட்ரி முடியுமா? வாய்ப்பு இருக்கா?
சென்னை: அதிமுகவை மீண்டும் 2026இல் ஆட்சியில் அமர்த்துவேன் என்று சசிகலா கூறியுள்ளார். அவரால் சிதறிக் கிடக்கும் அதிமுக தலைவர்களை ஒருங்கிணைக்க முடியுமா? எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை மீட்டு அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமா?
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்ததை அடுத்து அதிமுகவுக்குள் ரீ எண்ட்ரி கொடுக்க இருப்பதாக சசிகலா அறிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைத்து அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவேன் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

அதிமுகவில் அவர் இல்லை. அவருக்கும் அதிமுகவுக்குமான உறவு சட்டரீதியாகத் தொடர்கதையாகி உள்ளது. அதிமுக கடந்த சட்டசபை மற்றும் இந்த மக்களவைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிகாரப்பூர்வமாகச் சந்தித்துவிட்டது. ஆக, முழுக் கட்சியும் எடப்பாடி பழனிசாமியிடம் தான் உள்ளது. ஆகவே, சசிகலாவின் முயற்சி எந்தளவுக்கு எடுபடும் என்பது புரியாத புதிராக உள்ளது.
சசிகலா ரீ எண்ட்ரி: எப்படி ஒருங்கிணைப்பீர்கள் எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'பொறுத்திருந்து பார்க்கத்தானே போகிறீர்கள்?" என்று பதிலளித்துள்ளார் அவர். ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் உள்ளனர்.
அவர்தான் இப்போதுவரை அதிகாரப்பூர்வமான பொதுச்செயலாளராக உள்ளார். சசிகலா தற்போது அதிமுகவில் ஜாதி ஆதிக்கம் உள்ளதாகச் சொல்லி இருந்தார். அதற்குப் பதிலளிக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, "கட்சிக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று ஒரே வரியில் பேசிவிட்டுப் போய்விட்டார்.
ஜெயக்குமார் போன்றவர்கள் சசிகலா ரீ எண்ட்ரி அதிமுகவில் நடக்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன், 'சசிகலா ஒரு செல்லாக் காசு' என்று கூறியுள்ளார்.
கடந்த 2021இல் அரசியலைவிட்டே ஒதுங்குகிறேன் என்று அறிவித்த சசிகலா, 2024 மீண்டு எண்ட்ரி கொடுத்து 2026இல் அதிமுக ஆட்சியை அமைப்பேன் என்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை சசிகலாதான் அவருக்கு அரசியல் ஆலோசகராக இருக்கிறார் என்றும் வியூகங்களை அமைப்பது எல்லாம் சசிகலா தான் எனவும் ஒரு பேச்சு நிலவியது.
ஆனால், அவர் மறைவுக்குப் பின்னர் சசிகலா எடுத்த அனைத்து முடிவுகளும் சொதப்பலாகவே முடிந்துள்ளது. அப்படிப் பார்த்தால், இவரா ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார் என்ற ஐயம் எழுகின்றது.
அதிமுகவில் சாதி உள்ளதா?: சசிகலா அதிமுகவில் சாதி நிலவுகிறது என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதே நேரம் தான் சாதி பார்க்காமல்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினேன் என்றும் கூறியுள்ளார். சசிகலா சொல்வதைப் போல் அதிமுகவில் சாதி இல்லை என்று சொல்ல முடியாது.
அதாவது ஜெ உயிருடன் இருந்த போது அந்தக் கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரின் கையிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கையிலும்தான் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. பலரும் அதை வெளிப்படையாகவே சொன்னார்கள்.
சசிகலாவை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன் ஆதரித்து வந்ததன் பின்னணியில் கூட சாதிய அரசியல் உள்ளதாகவேதான் பலரும் கருத்து கூறி வந்தனர். இன்னும் சொல்லப்போனால் மன்னார்குடி கட்டுப்பாட்டில் உள்ளது என்று சூசகமாகப் பலரும் அதைப் பேசியுள்ளனர்.
தஞ்சை முதல் மதுரை வட்டாரம் வரை ஒரு குறிப்பிட்ட சாதியின் கட்டுப்பாட்டிலிருந்த அதிமுக இப்போது கொங்கு வட்டார சாதிய பின்புலத்திற்குள் போய்ச் சேர்ந்துள்ளது. ஆகவே அதிமுகவில் சாதியே இல்லை என்ற கருத்தை முழுமையாக ஏற்க முடியாது என்றே பலரும் சொல்கின்றனர்.
ஜெயலலிதா பல நேரங்களில் சாதியை உடைக்கின்ற மாதிரியான காரியங்களில் ஈடுபட்டுள்ளார். சபாநாயகர் நியமனத்திலிருந்து சங்கராச்சாரியார் கைது வரை அவர் சாதி வட்டத்திற்குள் சிக்காமல் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
பாஜகவின் குரலாக சசிகலா:கடந்த 2021இல் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. ஆகவே, பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாகக் கடைசிக் கட்டத்தில் தன் அரசியல் வாழ்க்கைக்கே முழுக்குப் போடுவதாக சசிகலா அறிவித்தார்.
அதன்பின்னர் அடிக்கடி செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தார். அவர் புதியதாக வீடு கட்டி குடி போனபோது ரஜினிகாந்த் அவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார். அப்போது அவரிடம் சசிகலா அரசியல் தொடர்பாகக் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அரசியல் வேண்டாம் என்று சொன்னார். அதையே சசிகலாவும் வழிமொழிந்தார்.
ஆனால், இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜகவைவிட்டு விலகியது. அதனால் இரண்டு கட்சிக்குப் பல நஷ்டங்கள் ஏற்பட்டன. குறிப்பாக 12 தொகுதிகள் வரை கிடைத்திருக்கலாம் என்று வாக்கு சதவீதங்களை வைத்து பலரும் கணித்துக் கூறி வருகின்றன.
அதிமுக இனி 2026லும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவு படுத்தியுள்ளார். ஆகவே, அதிமுகவுக்குள் சசிகலாவை நுழைத்து ஒரு ஆதாயத்தை பாஜக பெற முயற்சி செய்வதாகச் சொல்லப்படுகிறது. சசிகலாவின் பின்னணியில் பாஜகவின் காய்நகர்த்தல் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
பாஜக வலுவான கட்சியாக மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி வந்திருக்கலாம். இப்போது அது மைனாரிட்டி அரசு. ஆகவே, மறைமுகமாக சசிகலாவைக் களத்தில் இறக்கி உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இது பற்றி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சசிகலா ரீ என்ட்ரி பற்றிப் பேசுகையில், "அதிமுகவுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும் என்பது சரியான கருத்துதான். ஆனால், இப்போது அந்த ஒற்றுமையைக் கொண்டுவர முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. அவர் பெங்களூரு சிறையிலிருந்து வெளியே வந்தபோது ஒரு எழுச்சி இருந்தது.
அந்த எழுச்சியை அவர் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்றுதான் எனது கருத்தாக உள்ளது. அரசியலில் ஒரு வாய்ப்பை இழந்தால், மறுவாசிப்பைப் பெறுவது மிகமிக கடினம். 2017இல் அவர் பெங்களூருக்குச் சென்றார். இப்போது 2024 நடக்கிறது.
இந்த 7 ஆண்டுகளில் அதிமுகவின் அரசியல் சக்கரம் எத்தனையோ முறை சுற்றிவிட்டது. சசிகலா அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு ஒபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டைத் தலைமையில் கட்சி செயல்பட்டது. இப்போது பன்னீர்செல்வம் கட்சிக்கு வெளியே இருக்கிறார்.
டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவர் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. அதிமுகவுடன் இணக்கமாகப் போவதற்குத்தான் வாய்ப்பு உள்ளது எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இப்படி ஒபிஎஸ் ஒரு பக்கம், இபிஎஸ் ஒருபக்கம், சசிகலா ஒரு பக்கம், டிடிவி தினகரன் ஒரு பக்கம் எனச் சிதறிக் கிடக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால், எப்படி இந்தக் கட்சி ஒன்றிணையப் போகிறது என்பதுதான் விளக்க முடியாத புதிராக உள்ளது.
சசிகலாவின் தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால், அது சாத்தியமில்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால் சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனைப் பெற்றதால் தடை காலம் உள்ளது. கூடவே அபராத காலம். எனவே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவர் மக்களைச் சந்தித்து திமுக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டலாம். அதைச் செய்வதில் தடை இல்லை. அவர், 'எடப்பாடி பழனிசாமியை நான் முதல்வராக்கினேன். அப்போது நான் சாதி பார்த்தேனா?' என்று அவர் செய்தியாளர்களைப் பார்த்துக் கேட்டுள்ளார். அந்தக் கேள்வியும் சரியானதுதான்" என்கிறார்.












Click it and Unblock the Notifications