எடப்பாடியை பகைத்துக்கொண்டு.. பாஜகவால் அரசியல் பண்ண முடியாது.. என்ன இவர் இப்படி சொல்லிட்டாரே! உண்மையா
எடப்பாடியை பகைத்துக்கொண்டு எல்லாம் பாஜகவால் இங்கே அரசியல் செய்ய முடியாது என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜக சொல்வதை எடப்பாடி அப்படியே கேட்பார் என்றும் சொல்ல முடியாது, எடப்பாடி நினைத்தால் பாஜகவை கண்டிப்பாக மீறி செயல்படுவார் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த வேட்பாளருக்கு பாஜகவும் ஆதரவு அளித்துள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை பாஜக அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியாது என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், அதிமுக என்ற கட்சி வலிமையாக இருக்க வேண்டும். அதன் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வலிமையான கட்சியாக அதிமுக இருக்க வேண்டும் என்பதே இப்போது முக்கியம். அதிமுக ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு நல்லது. அதிமுக பிரிந்தால் செல்லா காசு ஆகிவிடும். தமிழ்நாட்டில் அதிமுகவிடம் இருக்கும் பெரும்பாலான வாக்குகள் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள். அது அதிமுக வாக்குகள் கிடையாது. இப்போது அதிமுக இல்லையென்றால் திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு செல்லும். ஒரே வருடத்தில் செல்லாது என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவிற்கு செல்லும்.

முட்டிக்கொண்டனர்
அதிமுகவினர் பிரிந்து முட்டிக்கொண்டால் அது தமிழ்நாட்டிற்கு நல்லது கிடையாது. பாஜகவின் மதவாதம் இங்கே வந்துவிடும். தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறை இருப்பதால் இதை பேசுகிறோம். அதிமுகவும் இதை பற்றி எண்ண வேண்டும். பாஜகவிடம் அதிமுக சரண் அடைந்தாலும் பிரச்சனை இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். எடப்பாடி மீது குறைகள் இருந்தாலும் அவர் அதிமுகவை தனி கட்சியாக வைத்து இருக்கிறார். பாஜகவிடம் சரண் அடையவில்லை. அவர் அதிமுகவை தனி பெரிய கட்சியாக நடத்த பார்க்கிறார்.

ஓ பன்னீர்செல்வம்
ஆனால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவிடம் அதிமுகவை அடகு வைக்க போகிறார். எடப்பாடியும் பாஜக பக்கம் நகரவே மாட்டார் என்று சொல்ல முடியாது. எடப்பாடி அப்படியே பாஜக சொல்வதை கேட்பார் என்றும் சொல்ல முடியாது. எடப்பாடி நினைத்தால் பாஜகவை மீறி போவார். ஏற்கனவே பாஜகவோடு இருந்த சிவசேனா, அகாலி தளம், நிதிஷ் குமார் என்று வரிசையாக வெளியேறிவிட்டனர். மீதம் இருப்பது அதிமுக மட்டும்தான். அந்த அதிமுகவை பகைத்துக்கொள்ள மோடி துணிய மாட்டார். அதிமுக இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு மோசமான நிலைமை ஏற்படும்.

எடப்பாடி பகை
எடப்பாடியை பகைத்துக்கொண்டு எல்லாம் பாஜகவால் இங்கே அரசியல் செய்ய முடியாது. எடப்பாடியை இவர்களால் மிரட்ட முடியாது. எடப்பாடி வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் முடிந்தது. ரெய்டு நடத்தி எல்லாம் எடப்பாடியை மிரட்ட முடியாது. இவர்கள்தான் எடப்பாடியை நம்பி இருக்கிறார்கள். எடப்பாடி ஒரு கட்டத்திற்கு மேல் உறுதியாக நின்றால் பாஜகவிற்கு வேறு வழியில்லை. தேசிய அளவில் பாஜகவிற்கு யார் இருக்கிறார் சொல்லுங்கள்? பாஜகவுடன் யார் இருக்கிறார்?

பாஜக
பாஜகவால் எடப்பாடியை எதுவும் செய்ய முடியாது. ஓ பன்னீர்செல்வமும் தான் யாருடைய ஆள் என்பதை நிரூபித்துவிட்டார். இனிமேல் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக உள்ளே விட மாட்டார்கள். அப்படியே விட்டாலும் எடப்பாடி தனியாக வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். எடப்பாடி 2024 தேர்தலை பற்றி கவலைப்பட மாட்டார். 2026 தேர்தல் மீதுதான் எடப்பாடி கவனம் செலுத்துவார். நாடாளுமன்ற தேர்தலை பற்றி கவலையே பட மாட்டார். 2026ல் திமுகவிற்கு மிக கடுமையான போட்டியாக எடப்பாடி இருப்பார். 2026ல் திமுக வெல்லவே சான்ஸ் இல்லை என்று கூட நான் சொல்லுவேன், மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications