ஐஸ்வர்யா ராய் மாதிரி நானும் லிப்ஸ்டிக் போட்டுட்டு! மாமன்றக் கூட்டத்திற்கு செல்வேன்! பாஜக உமா ஆனந்தன்
சென்னை: லிப்ஸ்டிக் போட கூட உரிமை இல்லையா என்ன? ஐஸ்வர்யா ராய் மாதிரி பர்பிள் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கவுன்சிலர் கூட்டத்திற்கு போக போறேன் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தின் பெண் டபேதார் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வந்ததால்தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக வந்த தகவல் வைரலாகி வருகிறது. பலரது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது. ஆனால் இதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.

டபேதார் இடமாற்றத்தை கண்டித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளை கொடுக்க வேண்டும் என தந்தை பெரியார் பாடுபட்டதாக திமுகவினர் கூறுகிறார்கள். அதிலும் அந்த டபேதார் பளீச்சென லிப்ஸ்டிக் போட்டதால்தான் அவரை பணியிடமாற்றம் செய்ததாக கூறுகிறார்கள்.
இதுதான் திமுகவினர் பெண்களின் உரிமைக்காக பாடுபடுவதா? அவர் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளலாம். அது அவருடைய உரிமை! என் தட்டு, என் சாப்பாடு, என் உரிமைனு பீஃப் விஷயத்தில் சொன்னார்கள். என் உதடு என் லிப்ஸ்டிக் என் உரிமை என சொல்ல தயங்குவதேன்.
லைட் நிறத்தில்தான் லிப்ஸ்டிக் போட வேண்டும் என அரசாணை வெளியிடட்டும். இல்லாவிட்டால் நானே மாமன்றக் கூட்டத்தில் கேட்கிறேன். நானே லிப்ஸ்டிக் போட்டுகிட்டு போக போறேன். பிரான்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பர்பிள் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார். அது விவாதமானது.
அந்த மாதிரி ஏதாவது ஒரு கலரில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு போக போறேன். என் வயதுக்கு ஒவ்வாதுதான். ஆனால் அந்த டபேதாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டுதான் செல்ல போகிறேன். இவ்வாறு உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணிக்குச் சேர்ந்தார். மாநகராட்சியின் மேயராக ஆர். பிரியா பொறுப்பேற்ற பிறகு அவரது டபேதாராக மாதவி கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு அவர் உதட்டில் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டு வருவதுதான் காரணம் என தகவல் வெளியானது. மாதவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் வராமல் இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மாதவி "எனக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அலுவலகத்திற்கு, அலுவலக நேரத்திற்கு முன்னதாக வர இயலவில்லை. அலுவலகத்தை விட்டு தினமும் காலதாமதமாக இரவு 8 அல்லது 9மணிக்குத்தான் புறப்படுகிறேன். வீடு சென்று சேர இரவு 11 மணி ஆகிறது. சமைத்து சாப்பிட்டு விட்டு தூங்க நள்ளிரவு 1 மணி ஆகிறது. அதனால் மீண்டும் காலையில் பணிக்கு வர உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது.
கடந்த இரு தினங்களாகதான் அலுவலகத்தை விட்டு முன்னதாக வீட்டிற்கு செல்கிறேன் என்றார். மேலும் அலுவலக நடைமுறை மீறுதல் தொடர்பான கேள்விக்கு "தாங்கள் என்னை உதட்டுச் சாயம் பூசக் கூடாது என கூறினீர்கள். நான் அதை மீறி பூசினேன். இது குற்றம் என்றால் எந்த அலுவலக ஆணையில் உள்ளது என தெரிவிக்கவும். மாநகராட்சியில் யாரிடமும் பேசக் கூடாது, எந்த பிரிவுக்கும் போகக்கூடாது என்றால் அது மனித உரிமை மீறலாகும். அதற்கு உண்டான அரசாணையை குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications