இன்னும் முடியல.. தொடரும் ஆபரேஷன்.. ஈரோட்டில் இருந்து அதிமுகவுக்கு தாவிய 50+ பாஜக நிர்வாகிகள்!
ஈரோடு மாவட்டத்தில் 50+ பாஜக நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.
சென்னை : பாஜகவில் இருந்து அடுத்தடுத்து ஆட்களை அதிமுகவிற்கு இழுத்து வருகிறார் சிடிஆர் நிர்மல் குமார். பாஜக ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் பலரையும் இழுத்து வருகிறார்.
தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில நாட்களாகவே என்ன நடக்கிறது என்று தெரியாமல் அக்கட்சியின் தொண்டர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதற்குக் காரணம் நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவதுதான்.
கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், பாஜகவில் இருந்து ஆட்களை இழுப்பது அண்ணாமலையை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

அண்ணாமலை மீது அதிருப்தி
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம்கட்டப்படுவதாகவும், அண்ணாமலை கட்சி நலனை விட தன்னையே முன்னிறுத்திக் கொள்வதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

நிர்மல் குமார் ஆபரேஷன்
இதனையடுத்து, பாஜக ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணனும் கட்சியில் இருந்து வெளியேறி அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் பாஜக ஐடி விங் நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் தற்போது தன்னுடன் நெருக்கமாக இருந்து வந்த பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த ஷாக்
அதன்படி பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருவது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அண்ணாமலைக்கு அடுத்த அதிர்ச்சி செய்தி வந்துள்ளது.

50+ நிர்வாகிகள்
ஈரோடு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக பிரச்சார பிரிவு செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் சால்வை அணிவித்து அனைவரையும் வரவேற்றார். பாஜகவினர் அடுத்தடுத்து அதிமுகவிற்கு செல்வது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணாமலை கோபம்
அதிமுகவின் இந்த செயல்பாடுகள் அண்ணாமலைக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications