தென் மாவட்ட கோவில் நகரத்தை குறிவைக்கும் பாஜக.. தவியாய் தவிக்கும் அதிமுக! கோட்டையை நிரூபிக்குமா திமுக?
சென்னை: அதிமுக கூட்டணியில் ( AIADMK BJP Alliance) இடம் பெற்றுள்ள பாஜக, கோயில் நகரங்களை டார்கெட் செய்து பெரிய பட்டியலையே அதிமுகவிடம் கொடுத்துள்ளதாம். அதில் ஒரு தொகுதியாக திருச்செந்தூரும் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக vs அதிமுக என்றே திருச்செந்தூரில் இதுவரை களம் இருந்து வரும் நிலையில், பாஜக குறுக்கே வருவதால் ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்..
தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கவிட்டது. சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடந்துவிடும். தேர்தல் அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்தில் எதிர்பார்கப்படுகிறது.

அதிமுக - பாஜக கூட்டணி
தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி களப்பணிகளில் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. தற்போது ஆளும் திமுக வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி இலக்கு நிர்ணையித்து கட்சி பணிகள் செய்து வருகிறது.
மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி, எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி), டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
திருச்செந்தூரை டார்கெட் செய்யும் பாஜக
மேலும் சில கட்சிகள் இந்தக் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இன்னொரு பக்கம் விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளது. இப்படி நான்குமுனை போட்டி இருப்பதால் அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக சில முக்கிய தொகுதிகளை குறிவைத்து கேட்பதால் அதிமுக தலைமைக்கு நெருக்கடியை கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கோவில் நகரங்களை குறிவைத்து பாஜக. சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூரையும் பாஜக டார்கெட் செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது..
தோல்வியையே சந்திக்காத அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாக உள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னன் அங்கு 6 முறை தோல்வியையே காணாமல் எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுகவில் இருந்த போதும் சரி திமுகவில் இருந்த போதும் சரி.. அனிதா ராதாகிருஷ்ணனே தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார்.
திருச்செந்தூர் தொகுதியில் 2016-ல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற சரத்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பாக கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அனிதா ராதாகிருஷ்னன் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
கோவில் நகரங்களை குறிவைக்கும் பாஜக
வங்க கடலோரம் அமைந்துள்ள திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்கள் உள்ளன. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் மற்றும் குலசை முத்தாரம்மன் என பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களை கொண்டுள்ளது. கோவில் நகரங்களை குறிவைத்து சீட் கேக்கும் பாஜக, திருச்செந்தூரையும் குறிவைத்து கேட்கிறதாம்.
அதேபோல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதிக்கு அடிபோடுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுகவில் ஏற்கனவே கட்சி பணிகளை தீவிரமாக செய்து தேர்தலில் களம் காணும் வேட்கையுடன் பலர் இருப்பதால் இந்த தொகுதியை விட்டுக்கொடுக்க அதிமுக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் விருப்பம் இல்லை.
2,22,631 வாக்காளர்கள் உள்ளனர்
இப்படி மும்முனை நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கும் அதிமுக தலைமை, இந்த தொகுதியை பாஜகவிடம் விட்டுக்கொடுக்குமா? என்ற பேச்சுகள் திருச்செந்தூர் தொகுதி அதிமுகவினர் இடையே அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது. எது எப்படியோ கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.. இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கு விடை கிடைத்து விடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
திருச்செந்தூர் தொகுதியை பொறுத்தவரை எஸ்.ஐ.ஆர் வரைவுப் பட்டியல் விவரப்படி மொத்தம் 2,22,631 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,08,526 பேரும் பெண்கள் 1,14,077 பேரும், 3 ஆம் பாலினத்தவர் 28 பேரும் உள்ளனர். திருச்செந்தூர் தொகுதியில் அதிகபட்சமாக திமுக 8 முறையும், அதிமுக 6 முறையும் காங்கிரஸ் 2 முறையும், விவசாய தொழிலாளர் கட்சி 1 முறையும் வென்றுள்ளன.












Click it and Unblock the Notifications