கரூர் நெரிசல் பலி.. ஹேமமாலினி தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது பாஜக!
சென்னை: பாஜக எம்பியான ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா என 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணை குழுவை, கரூர் நெரிசல் பலி குறித்து விசாரிக்க நியமித்திருக்கிறது பாஜக
நேற்று முன்தினம் இரவு கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்நிலையில், பாஜகவும் பாஜக எம்பியான ஹேமமாலினி தலைமையில் 7 உறுப்பினர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்த தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் இது குறித்து கூறுகையில், "அனுமதி வழங்கப்பட்ட இடம் பெரியது. அதேபோல, அனுமதி கேட்ட நேரத்தில் விஜய் வரவில்லை. 6-7 மணி நேரம் தாமதமாக வந்திருந்தார். கூட்ட நெரிசலுக்கு இதுவும் காரணம்" என கூறியிருந்தார். இதனையடுத்து இன்று கரூர் வந்திருந்த நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் கரூருக்கு வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார். வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்.
நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. யார் தவறு செய்தது என்று என்னால் சொல்ல முடியாது. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காகவே வந்துள்ளோம். ஆறுதல் கூறவே வந்தோம். இதில் வேறு எதுவும் இல்லை. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக்கூட வார்த்தை வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டு கலங்கி நின்றேன். இதுபோன்ற சம்பவம் இனி நாட்டில் எங்குமே நடைபெறக்கூடாது. பிரதமர் மோடி அறிவித்த நிவாரண நிதி பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே வந்து சேரும்" என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து பாஜக விசாரணை குழுவை அமைத்திருக்கிறது. குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜித்தா சாரங்கி, ரேகா ஷர்மா, ஸ்ரீ புட்ட மகேஷ் குமார் ஆகியோர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications