பொது சிவில் சட்டம்.. கருத்து கேட்கும் மத்திய அரசு.. 2024 தேர்தலுக்கு பாஜகவின் பக்கா பிளான்.. அதிருதே
சென்னை: பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள், வல்லுனர்கள், மதம் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது.
மத்திய அரசு இதனால் லோக்சபா 2024 தேர்தலுக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமரும் போதெல்லாம் பொது சிவில் சட்டம் பற்றி பேசப்படுவது வழக்கம்தான். 1949ல் நேரு பிரதமராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் வைக்கப்பட்டு இருக்கிறது.

பொது சிவில் சட்டம்: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும்.
இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள் ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது. அதேபோல் பல மாநிலங்களில் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை கொண்டு வர நாடு முழுக்க சில மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.
இந்தியாவில் இரண்டு சட்டங்கள் இருக்கிறது. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம். இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை. இந்தியாவில் இஸ்லாமில் சிவில் சட்டத்திற்கு பதிலாக ஷரியத் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.
1937ல் இருந்து இந்த சட்டம் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் வேறு சில சிறு சிறு மதங்களும் தங்களுக்கு ஏற்றபடி சட்டங்களை பயன்படுத்தி வருகிறது.
பல்வேறு மதங்கள் திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற விஷயங்களில் தங்களுக்கு என்று தனி தனி சட்டங்களை வைத்து இருக்கின்றன. இதைதான் நீக்கி மொத்தமாக சிவில் சட்டம் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது. கோவாவில் ஏற்கனவே ஷரியத் சட்டம் செல்லாது. அங்கு பொது சிவில் சட்டம் உள்ளது.
எதிர்ப்பு: இதை நாடு முழுக்க கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. இதனால் சிறுபான்மையினர் உரிமை, முக்கியமாக இஸ்லாமியர்கள் உரிமை பாதிக்கும் என்று புகார் எழுந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் பொது சிவில் சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவை தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில்தான், பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பொதுமக்கள், வல்லுனர்கள், மதம் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து இந்திய சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது. முத்தலாக் தடை கொண்டு வரப்பட்டது கூட பொது சிவில் சட்டத்தின் ஒரு படிநிலைதான் என்று வாதம் வைக்கப்படுகிறது.

தேர்தல்: மத்திய அரசு இதனால் லோக்சபா 2024 தேர்தலுக்கு தயாராகி வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் இந்துக்கள் வாக்குகளை அள்ளுவதற்காக பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முத்தலாக் தடையை வைத்து கடந்த முறை மத்திய அரசு எப்படி பிரச்சாரம் செய்ததோ அதேபோல் இந்த முறை ராமர் கோவில் மற்றும் பொது சிவில் சட்டத்தை வைத்து பாஜக பிரச்சாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications