அண்ணாமலை தவறை திருத்தியுள்ளார்.. இனிமேல் விமர்சிக்க மாட்டார்.. சர்டிபிகேட் கொடுத்த ஜெயக்குமார்
சென்னை: ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சிக்கும் வகையில் பேசியதாக அவருக்கு கூட்டணி கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்றெல்லாம் ஜெயக்குமார் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை தவறை திருத்தி விட்டதாக ஜெயக்குமார் பேசியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் காரசாரமாக கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. கூட்டணிக்கு தலைமை என்பதில் தொடங்கி சீட் விவகாரம் வரை காரசாரமான பேட்டிகளை இரு கட்சியில் இருந்துமே இரண்டாம் கட்ட தலைவர்கள் வெளியிடுவதும் சமூக வலைத்தளங்களில் அதிமுக - பாஜக ஆதரவாளர்கள் மல்லுகட்டுவதும் நீடித்து வந்தது.

ஆனாலும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றே அதிமுக தலைமையும் சரி.. பாஜக தலைமையும் சரி கூறி வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் ஊழல் குறித்தும், முன்னாள் முதல்வரே ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்தான் என்றும், இந்தியாவிலேயே ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்றும் பேசியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த கருத்து ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சிப்பதாக கூறி அதிமுக கொந்தளித்தது. அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தலைமை அலுவலகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இனியும் எங்க பேச்சுக்கு வந்தால் அண்ணாமலை வாங்கிக் கட்டிக்கொள்வார்..அண்ணாமலைக்கு கொஞ்சமும் நாவடக்கம் இல்லை.. மற்ற கட்சி வேண்டுமானால் சூடு சொரணை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், நாங்கள் அப்படி இருக்க முடியாது.. எங்கள் காலை மிதித்தால், நாங்கள் திரும்ப மிதிப்போம்" என்று ஆக்ரோஷமாக பேசினார். இதற்கு தமிழக பாஜக நிர்வாகிகளும் பதிலடி கொடுத்து இருந்தனர். அண்ணாமலை மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அண்ணாமலை மீது எந்த ஒரு நடவடிக்கையும் பாயவில்லை.

அதிமுக - பாஜக இடையேயான மோதல் விவகாரம் சற்று தணிந்துள்ள நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார், அண்ணாமலைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:- மறைந்த தலைவரை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை கருத்து அமைந்ததற்கு அதிமுக கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஊடகங்கள் முன்னாடி கண்டனத்தை தெரிவித்தோம். அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானமும் போடப்பட்டது.
அதன்பிறகு அண்ணாமலை ஜெயலலிதாவை புகழந்து பேசினார். ஜெயலலிதாவை மதிக்கிறேன்.அவரை போல பெரும் தலைவர் வரமுடியாது. அவரது வழியை பின்பற்ற வேண்டும். 5 நிமிடம் ஜெயலலிதாவை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அதன் சாராம்சம் என்ன? அண்ணாமலை உணர்ந்து விட்டார். தவறை திருத்திக் கொண்டுள்ளார். எனவே, இனிமேல் கட்சியை பற்றியோ எங்களை பற்றியோ அந்த மாதிரி விமர்சனங்கள் வராது என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications