ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் ஜெயக்குமார் அடித்த கமெண்ட்.. வெடித்துச் சிரித்த எச்.ராஜா, சரத்குமார்
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இந்த நிகழ்வில் பாஜகவின் எச்.ராஜாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அளவளாவிய காட்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில் குடியரசு தினமான இன்று (ஜன.26) ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டைப் போல் இந்தாண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. சென்னையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி சென்றுள்ளார். டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். இதற்கு முன்பு விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி வேண்டாம் என்று பேசி இருந்தார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதற்கு கண்டம் தெரிவித்தார். இந்நிலையில், விஜய்யும் இன்று ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்ணித்துள்ளார். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது.
அதேசமயம், பாஜக, அதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, சரத்குமார், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் பாஜகவின் எச்.ராஜாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அளவளாவிய காட்சி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்ததும், எழுந்து நின்று அவரை வரவேற்று சிரித்துப் பேசினார் எச்.ராஜா. ஜெயக்குமாரும், எச்.ராஜாவும் நின்றபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சரத் குமார் உடனும் சிரித்தபடி கமெண்ட் அடித்துப் பேசினார் ஜெயக்குமார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்தபோது, ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் கைகுலுக்கினார்.
அதிமுக - பாஜக இரு கட்சிகளின் தலைவர்களும், கடுமையாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை தாக்கிப் பேசி வருவதோடு, பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என உறுதியாக கூறி வருகிறார். இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர்களுடன் அவர் நெருக்கம் பாராட்டியது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications