கச்சத்தீவை பாஜக மீட்கும்.. ‘அவரை’ இலங்கைக்கு அனுப்பியதே அதற்காகத்தான்- உறுதியாக சொன்ன விபி துரைசாமி!
சென்னை : கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக மீட்டுத் தரும் என பா.ஜ.க மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் இன்று யோகா பயிற்சி நடத்தப்படுவதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன. தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்காகவுமே அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யோகா தினம்
கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 8-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மனித சமூகத்துக்கான யோகா என்ற கருத்துரு அடிப்படையில் இந்த ஆண்டுக்கான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி உள்பட நாட்டின் முக்கிய தலைவர்கள் பலர் இன்று யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

வி.பி.துரைசாமி
இந்நிலையில், சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "யோகா கலையை பாதுகாக்க பிரதமர் மோடியால் 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று தமிழகத்தில் பாஜக சார்பில் 10 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடைபெறுகிறது.

அண்ணாமலை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கும் பயிற்சி முகாமில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர். கன்னியாகுமரியில் நடக்கும் பயிற்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி பங்கேற்கிறார். 75-வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா தற்போது கொண்டாடப்படும் நிலையில், நாடு முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் இன்று யோகா பயிற்சிகள் நடக்கிறது.

கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மத்திய அரசு உறுதியாக மீட்டுத் தரும். கச்சத்தீவை மீட்பதற்காகவே, அங்குள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள, மத்திய அரசால் அண்ணாமலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கச்சத்தீவை பா.ஜ.க நிச்சயம் மீட்கும். அதற்கு அண்ணாமலை காரணமாக இருப்பார்.

அக்னிபாத்
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன. தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவும், அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டுகள் பயிற்சியை முடித்த பிறகு, அவர்களிடம் கருத்தை கேட்டு குறைகள் இருந்தால், அதை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசினால் ஏற்றுக்கொள்ளலாம்.

அரசியல் சாயம்
அதைச் செய்யாமல் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டுவது தேச நலனுக்கு எதிரானது. தேச நலனில் அரசியல் சாயம் பூசக்கூடாது. 'போராட உரிமை இருக்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது, சின்னப்பிள்ளைத் தனம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications