விருப்ப மனு தாக்கல் செய்யும் முன்.. கமலாலய வாயிலை தொட்டு கும்பிட்ட நயினார் நாகேந்திரன்.. நெகிழ்ச்சி
சென்னை: பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கமலாலயத்தின் வாயிலை தொட்டு வணங்கி உள்ளே சென்றுள்ளார். இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கிய நிலையில், முக்கிய நிர்வாகிகளின் பரிந்துரையுடன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜகவின் அடுத்த மாநில தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இந்த பயணத்தையொட்டி நேற்று பாஜக மாநில தலைவருக்கான விருப்ப மனு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் யாரெல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் மாநில தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க பாஜகவில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதி தேர்தல் அறிவிப்பாணையில் இடம்பெற்றிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் கடந்த 2017ஆம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில், அவருக்காக விதிகள் தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஏனென்றால் கடந்த முறை மாநில தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். பதவிக்கு வருவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தான் அவர் பாஜகவிலேயே இணைந்தார். அதுமட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரன் ஆர்எஸ்எஸ் முகாமில் இருந்து வந்தவர் அல்ல. இதனால் அவரை மாநிலத் தலைவராக நியமனம் செய்வதற்கு ஆர்எஸ்எஸ் தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு நயினார் நாகேந்திரன் வந்துள்ளார். கமலாலயத்திற்கு வந்த அவர், கமலாலயத்தின் வாயிலை தொட்டு கும்பிட்டு உள்ளே சென்றுள்ளார். அதேபோல் மாநில தலைவருக்காக போட்டியிடும் விருப்ப மனுக்கள் 2வது தளத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
அவர் நேரடியாக 2வது தளத்திற்கு தான் சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் தமிழக பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனாலும் கட்சி விதிகள் அவருக்காக தளர்த்தப்படுமா என்ற கேள்வியே பாஜகவின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவருக்கான தேர்தலில் நயினார் நாகேந்திரன் விருப்ப மனு வழங்கியுள்ளார். அவரை அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications