தெருவில் புகுந்து தாக்கிய ரவுடிகள்.. காரணமே விசிக மனித சங்கிலி போராட்டம் தான்.! பாஜக நாராயணன் பரபர
சென்னை: விடுதலை சிறுத்தைகள் மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இதை பாஜக நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் இன்று இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டி காலி இடம் உள்ளது, அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தாக்குதல்
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அஞ்சி ஓடியுள்ளனர். மேலும், அவர்கள் கையில் இருந்த கத்தியைக் கொண்டு அங்கிருந்த நவீன்(31), ஷபீக்(22), அபுபக்கர்(19), ஆகிய மூன்று பேரைத் தலையில் வெட்டிவிட்டு, தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்தனர்.

போலீசார்
இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கேயே முகாமிட்டனர். தலையில் வெட்டுக்காயம் அடைந்த மூவரும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும், தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கிண்டியை சேர்ந்த பிரபல ரவுடி நாகூர் மீரான் தங்கள் பலத்தை நிரூபிக்க மிரட்டியிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நாராயணன் திருப்பதி
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டுகள் கலாசாரம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். பாஜகவின் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், "சட்டம் ஒழுங்கு சீர்கேடும் என்ற காரணத்திற்காக 2 அக்டோபர் அன்று விடுதலை சிறுத்தைகள் மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுத்தது தமிழகக் காவல்துறை. ஆனால் இன்று அனுமதியளித்துள்ளது. அந்த அனுமதி அளித்ததன் காரணமாகத் தான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்று சொன்னால் மறுக்க முடியுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி
முன்னதாக தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுக்க நடந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதத்தின் அடிப்படையில் பகை ஏற்படுத்தவும் அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளையும் அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி விசிக இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications