என்னாது கையை வெட்டுவார்களா? கொலை செய்வார்களா? ரவுடி போல் பேசும் அமைச்சர்கள்.. பாஜக நாராயணன் தாக்கு
கை, கால்களை வெட்டுவேன், கொலை செய்வேன் என பொறுப்புமிக்க அமைச்சர்கள் பேசலாமா என பாஜக நாராயணன் கேள்வி
சென்னை: கை, கால்களை வெட்டுவேன், கொலை செய்வேன் என ரவுடிகளை போல் திமுக அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மீது யாராவது கை வைத்தால் வெட்டி விடுவேன். கையை வெட்டுவது எனது நியாயம். இது சரியா தவறா என்பதை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்
அத்துடன் ஸ்டாலினை தீண்டினால் கூட கையை வெட்டுவேன் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். கையை வெட்டுவது, கல்லை தூக்கி எறிவது, கொலை செய்வேன் என மிரட்டுவது இவையெல்லாம் சொல்வது ரவுடிகள் இல்லை. இவர்கள் இன்றைய தினம் அமைச்சர்களாகவும் சட்டசபை உறுப்பினர்களாவும் இருக்கிறார்கள்.

மக்களவை உறுப்பினர்
அது போல் பேசியிருப்பது அனுபவம் வாய்ந்த ஒரு மக்களவை உறுப்பினர். தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கிற திராவிட மாடல் என பெருமைப்பட்டு கொண்டிருக்கும் திமுகவுக்கு மிகப் பெரிய இழுக்கு. இதே போல பேசியவர்கள் பட்டியலில் தாமோ அன்பரசன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நாசர் உள்ளிட்டோர் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

கனிமொழி
கனிமொழி மதுவை ஒழிக்க வேண்டும் என்று திமுக சொன்னதே இல்லை என கூறுகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், "இந்தியாவில்தான் அதிகம் இளம் விதவைகள் இருக்கிறார்கள்" என்று சொன்ன கனிமொழி மதுவை குறைப்போம் என சொல்லவில்லை என்கிறார். திமுகவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம். ராமர் பாலத்தை எந்த காரணத்தைக் கொண்டும் இடித்துவிட்டு சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர விட மாட்டோம்.

சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திரம் திட்டத்திற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட பல லட்சம் டன் மணல் எங்கே சென்றது? அதில் எவ்வளவு பணம் வந்தது, எத்தனை லட்சத்தை அரசு கருவூலத்தில் சேர்த்தார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக பதில் சொல்ல வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறார். அதை நீக்கிவிட்டு பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும். திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார். இவ்வாறு பாஜக நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications