சரியில்லையே.. அடுத்தடுத்து வெளியேறும் பாஜக நிர்வாகிகள்! நேரடியாக வரும் டெல்லி "தலை".. இன்றே மீட்டிங்
பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்ய உள்ளதாம்.
சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை நட்டா திறந்து வைக்கிறார். பாஜகவினர் வரிசையாக அதிமுகவில் இணையும் நிலையில் நட்டா தமிழ்நாடு வருகிறார்.
தமிழ்நாட்டில் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது பற்றி டெல்லி பாஜக தலைகள் நேரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் பேச உள்ளதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக பாஜகவினர் வரிசையாக தமிழ்நாட்டில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.

வாழ்த்து
கூட்டணி கட்சி தலைவராக இருந்தாலும்.. அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை கூட எடப்பாடி கட்சியில் சேர்த்துக்கொள்கிறார். மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி நிர்மல் இழுத்து வருகிறார். அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இது நேற்று லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

அண்ணாமலை
இதனால்தான் அதிமுக பாஜக இடையே வெளிப்படையான மோதல் ஏற்பட்டு உள்ளது. அதிமுகவை சரமாரியாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் முதலில் காட்டமாக கருத்து சொன்ன அமர் பிரசாத் ரெட்டி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?இனி, அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை! அதிமுக ஒரு கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இதை செய்திருக்ககூடாது. அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்.நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். அப்படி இருக்கையில், கொள்கையற்ற கட்சி மாறி-பிழைப்புவாதிகளை வைத்து, அடுத்தவரை கேவலப்படுத்தி ரசிக்கும் கேவலமானவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியானவரா?, என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணாமலை
அதிமுகவை எதிர்த்து பேசிய அண்ணாமலை, பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் எடப்பாடியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்த சம்பவங்களும் நடந்தது

நட்டா
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழ்நாடு வருகை புரிய உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை நட்டா திறந்து வைக்கிறார். இதையடுத்து நட்டா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த குழு கூட்டத்தில் நட்டா பேச உள்ளார். அதில் பாஜக - அதிமுக மோதல் குறித்து பேசுவார்கள். இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பேசுவார். அதோடு ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு குறித்தும், அவரை ஆதரிக்கலாமா என்பது குறித்தும் இவர்கள் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி
அதிமுக - பாஜக மோதலால் எங்கே இவர்கள் கூட்டணி உடைகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி பாஜகவிற்கும் ஏற்கனவே இந்த மோதல் குறித்து தகவல் சென்றுள்ளது. என்னதான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று டெல்லி பாஜக இதை பற்றி விசாரித்து உள்ளதாம். இது தொடர்பாக நேரடியாக பாஜக தேசிய தலைவர் நட்டா, தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் தலையிட்டு எடப்பாடியிடம் பேச போவதாக தகவல் வெளியாகி உள்ளது. போன் மூலம் இவர்கள் எடப்பாடியிடம் நேரடியாக பேசி அவரின் நிலைப்பாட்டை கேட்க வாய்ப்பு உள்ளது. அதன்பின் இதில் நட்டா ஒரு முடிவை எடுப்பார். அதுவரை பாஜக தலைவர்கள் இதில் எந்த விதமான முடிவையும் எடுக்க கூடாது, எதையும் பேச கூடாது என்று டெல்லி தரப்பு அட்வைஸ் செய்து உள்ளதாம். இதற்கு இடையில்தான் நட்டா தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications