அண்ணாமலை + கேடி ராகவனுக்காக.. அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்ட பாஜக.. யோசிக்கும் எடப்பாடி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5 தொகுதிகளை மாற்றி தரும்படி அதிமுகவிடம், பாஜக கோரிக்கை வைத்துள்ளது. பாஜக சார்பில் அண்ணாமலை, கேடி ராகவன் உள்பட சில முக்கிய தலைவர்களுக்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் அதிமுக பிற தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அண்ணாமலை - பாஜகவினர் அப்செட்
குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளை குறிவைத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஒதுக்கவில்லை. இதேபோல் பாஜக பலமாக இருப்பதாக நினைக்கும் சென்னை, கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜக தொண்டர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று மேலிட தலைவர்களிடம் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி பல இடங்களில் பாஜக தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தி நகர், கோவையில் கிணத்துக்கடவு, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தொகுதிகளை பாஜக பெற வேண்டும் என்று அவர்கள் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இது அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 தொகுதிகளை மாற்ற கோரிக்கை
இந்நிலையில் தான் பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, எம் வெங்கடேசன், கேடி ராகவன், கே வசந்தராஜன் உள்ளிட்டவர்களை தேர்தலில் களமிறக்கும் வகையில் பாஜக 5 தொகுதிகளை மாற்றி தரும்படி அதிமுகவை அணுகி உள்ளது. இவர்கள் போட்டியிட்டால் அது பாஜக மட்டுமின்றி அதிமுகவுக்கும் பலமானதாக இருக்கும் என்று கூறி பாஜக தலைவர்கள், அதிமுகவிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலைக்காக...
அதன்படி அண்ணாமலை கோவை சூலூர் அல்லது கவுண்டம்பாளையத்தில் களமிறங்க தயாரானார். ஆனால் அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் அவருக்கு கோவை அல்லது கரூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை வழங்கும்படி பாஜக தரப்பில் அதிமுகவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சூலூர் அல்லது கவுண்டம்பாளையம் அல்லது அரவக்குறிச்சி ஆகியவற்றில் ஒன்றை அதிமுகவிடம், பாஜக கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேடி ராகவனுக்காக..
அதேபோல் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் வசந்தராஜன் களமிறங்க தயாராகி வந்தார். ஆனால் அந்த தொகுதி அதிமுக எம்எல்ஏ தாமோதரனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு தொகுதியில் கேடி ராகவன், எழும்பூரில் வெங்கடேஷன் களமிறங்க ரெடியான நிலையில் அந்த தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இதனால் மொத்தம் 5 தொகுதிகளை பாஜக, அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று இரவுக்குள் முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதிமுகவிலும் தொகுதி மாற்ற 'டிமாண்ட்'
பாஜக மட்டுமின்றி அதிமுகவிலும் தொகுதிகள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜகவுக்கு மொத்தம் 3 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நேற்று மாலையில் அறந்தாங்கி அதிமுக நிர்வாகிகள் சிலர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் ''அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளிலும் எங்களால் வெல்ல முடியும். இந்த தொகுதிகளில் 2011, 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் பாஜகவிடம் இருந்து பெற வேண்டும்'' என்று கூறினர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எடப்பாடியின் முடிவு என்ன?
இந்த தேர்தலில் அதிமுக மொத்தம் 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டங்களாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதிமுகவின் பதிலுக்காக காத்திருக்கிறது.
இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி மாற்றம் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications