மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் தகராறு: பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல்! இளைஞர் அணி பதவி பறிப்பு
சென்னை: பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் அமர்நாத் யோகேஷ்வரன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக பிரமுகர் செல்வமணி வீட்டில் தாக்குதல் நடத்தியதாக அமர்நாத் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் கூறி அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வரும் பாஜக பிரமுகர் செல்வமணியின் வீடு, கார் மீது ஒரு கும்பல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. பாஜக நிர்வாகி அமர்நாத் யோகேஷ்வரன் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இவரது பதவியை பாஜக தலைமை பறித்துள்ளது.

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வருபவர் செல்வமணி. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கற்கள், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் வாசலில் நின்ற கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உடைத்தனர்.
மேலும் வீட்டின் மீதும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் அமர்நாத் யோகேஷ்வரனின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
கட்சி உட்பூசல் காரணமாகவே அமர்நாத் யோகேஷ்வரன் இந்த செயலை செய்ய சொன்னதாக கூறப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பாக வழங்கப்பட்ட பணத்தை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இருந்ததாகவும், அமர்நாத் தூண்டுதலின் பேரிலேயே தான் அவர்கள் 5 பேரும் செல்வமணி வீட்டில் சென்று கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறினர்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அமர்நாத் யோகேஷ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பாஜக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ததாக பாஜக இளைஞரணி சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செல்வமணி வீட்டில் நடந்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்நாத் யோகேஷ்வரன் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications