அதிமுகவை விடுங்க.. பாஜக பேரணிக்கு திமுகவினருக்கும் அழைப்பு விடுத்த நயினார் நாகேந்திரன்!
சென்னை: சென்னையில் இன்று நடக்கும் மூவர்ணக் கொடி பேரணியில், திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சியினரும் தேசியக்கொடி ஏந்தி பங்கேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக மட்டுமல்லாமல், திமுகவையும் பேரணிக்கு அழைத்துள்ளார் நயினார் நாகேந்திரன். அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் விடுக்கப்பட்ட சவால். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், நம் ராணுவம் பாகிஸ்தானுக்குள் சென்று, பயங்கரவாதிகள் முகாம், விமானப்படை தளத்தை அழித்தது. இதையொட்டி, சென்னை, எழும்பூர் சித்ரா தியேட்டர் அருகில் இன்று மூவர்ண கொடி பேரணி நடக்கிறது.
இது, பாஜக சார்பில் நடத்தப்படவில்லை. ஒற்றுமை பேரணி என்ற உணர்வுடன், திமுக - அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும். அனைவரும் தேச ஒற்றுமையை காப்போம் என்று பேரணியில் பங்கேற்க வேண்டும்." எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசியக் கொடியுடன் சிந்தூர் யாத்திரை நடத்துவது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டிருந்த அறிக்கையில், காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை கொன்று, உலக அமைதிக்கு எதிராகவும் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகவும் செயல்பட்டு வந்த பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் வகையில், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் நமது ஆயுதப்படைகளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அந்தவகையில் வீரத்துடன், விவேகத்துடன் துல்லியமாக தாக்குதல் நடத்தி மாபெரும் வெற்றிக்கு அடிகோலிய பிரதமர் மோடியின் உறுதியான தலைமையை சிறப்பிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தேசியக்கொடி ஏந்தியபடி 4 கட்டங்களாக யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாநில தலைநகரமான சென்னையில் இன்று (மே 14), இதர முக்கிய நகரங்களில் மே 15 ஆம் தேதியும் (நாளை), மற்ற மாவட்ட பேரூர்களில் மே 16, 17 ஆம் தேதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதிகள், தாலுகா, பெரிய கிராமங்களில் மே 18, 23 ஆம் தேதிகளிலும் தேசிய கொடி ஏந்திய யாத்திரைகள் நடத்தப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் கட்சி தலைமையிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகளுக்கு வழங்கப்படும்.
நம் வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும், நம் நாட்டின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் பெரிய அளவில் யாத்திரைகளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications