Oneindia Exclusive: கேரள ஆளுநரா நீங்க? ஜனாதிபதிக்கு புகார் கடிதம் போனது ஏன்? எச்.ராஜா சிறப்பு பேட்டி
சென்னை : கேரள ஆளுநராக தன்னை நியமிக்க இருக்கிறார்கள் என்பதே உறுதிபடுத்தப்படாத தகவல் எனும் நிலையில், அதை செய்யக் கூடாது என வழக்கறிஞர் ஒருவர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவது என்பது விளையாட்டாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
தற்போது தமிழக தலைவராக உள்ள அண்ணாமலை, முன்னாள் தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் எல்.முருகன் உள்ளிட்டோரை விட பல ஆண்டுகள் அனுபவமும், அதிரடி அரசியலும் செய்யக் கூடியவர்.

பாஜக ஹெச்.ராஜா
சர்ச்சைகளுக்கும் பெயர் போனவரான ஹெச்.ராஜா, தற்போதும் மிக தீவிரமாக அரசியல் களத்தில் களப் பணியாற்றி வருகிறார் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே கட்சி குறித்து ஆலோசனைகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகிறார். கடைசியாக நடந்த தேர்தல்களில் தோல்வியடைந்த, நிலையில் அவர் மத்திய அமைச்சராகவோ அல்லது ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ நியமிக்கப்படலாம் என கடந்த சில மாதங்களாகவே யூகங்கள் வெளியாகி வருகிறது.

கேரள ஆளுநர்?
அந்த வகையில் கடந்த வாரத்தில் ஹெச்.ராஜா அவர்கள் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இது ஒரு சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து பாஜகவினர் உற்சாக மனநிலையில் காணப்பட்டனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் ஹெச்.ராஜா கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வருகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எச். ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷம், ஆளுநராக நியமிக்கப்படுவாரா அல்லது கேரள ஆளுநராக நியமிக்கப்பட உள்ளாரா என்பதை குறித்து எனக்கு தெரியாது" என்றார்.

வழக்கறிஞர் கடிதம்
மேலும் இதுகுறித்து பாஜக தலைமையும் அல்லது குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில் இது யூகமாகவே தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான்.. "குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை ஆளுநராக நியமிக்க கூடாது.." என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு மூத்த வழக்கறிஞரான துரைசாமி என்பவர் கடிதம் எழுதினார். இதுகுறித்து நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஹெச். ராஜா மீது புகார்கள் உள்ளதாகவும் அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்பதால் அவரை ஆளுநராக நியமிக்க கூடாது என கூறியிருந்தார்.

ஹெச்.ராஜா பதில்
இந்நிலையில் ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக வெளியாகும் யூகங்கள் குறித்தும், வழக்கறிஞர் துரைசாமி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியது குறித்தும் கருத்து கேட்பதற்காக ஹெச்.ராஜாவை ஒன்இந்தியா தமிழ் சார்பில், தொடர்பு கொண்டோம்.. கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போது அது குறித்து கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது, அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வரவில்லையே" என்றார்.

யார் என்றே தெரியாது!
வழக்கறிஞர் துரைசாமி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ள கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, முதலில் சொன்ன பதிலை கவனிக்கனும், ஆளுநராக நியமிக்கப்படுவதாக வந்த தகவல் "பாதி உறுதி" படுத்தப்படல, பின்னர் கடிதம் எழுதி என்ன பிரயோஜனம், மொதல்ல அவரு யாருனு தெரியாது, சும்மா உக்காந்துகிட்டு லெட்டர் எழுதுறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது, விளையாட்டா இருக்கு" என ஹெச்.ராஜா ஒன் இந்தியா தமிழிடம் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications