Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சூத்திரன்".. பற்ற வைத்த ஆ.ராசா.. சப்போர்ட்டுக்கு வந்த சீமான்.. என்ன பண்ணுவீங்க நீங்க? பாயும் பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி ஆ. ராசாவின் கருத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருந்த நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் சீமானை கண்டித்து பேசி உள்ளார்.

இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்து திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசியது இணையம் முழுக்க வைரலானது. ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.

இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்.. இந்துவாக இருக்கும் வரை நாம் பஞ்சமன்.

இந்து சூத்திரன்

இந்து சூத்திரன்

இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்கள்.. இந்துவாக இருக்கும் வரை நாம் விபச்சாரியின் மகன். இந்த அவலத்தை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ஆ. ராசா காட்டமாக பேசி இருந்தார். ஆ. ராசாவின் இந்த பேச்சை தமிழ்நாடு பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். அவருக்கு எதிராக கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் பாஜகவினர் போராட்டம் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் ஆ. ராசாவின் கருத்துக்கு ஆதரவாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.

சீமான்

சீமான்

இது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்தில், மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக்கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்களைக் குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த அண்ணன் ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணை நிற்கிறது.

 ஐம்பதாயிரம் ஆண்டு

ஐம்பதாயிரம் ஆண்டு

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்தத் தொன்மப்பெருமைகள் பல வாய்ந்த தமிழர் எனும் தேசிய இனத்தின் மக்கள் நாங்கள். தமிழர்களின் வாழ்வியல் இலக்கணமே அறநெறிதான். அது சமத்துவத்தையும், சமதர்மத்தையுமே அடிப்படையாகக் கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என உயிர்ம சமத்துவம் போதிக்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார். 'சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்!' எனப் பாடுகிறார் சைவசமயக்குரவர் திருநாவுக்கரசர். 'பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?' என வினவுகிறார் சித்தர் சிவவாக்கியர். 'சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலேஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்!' என்று பாடுகிறார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். 'தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்' என்று அறம்போற்றுகிறார் ஐயா வைகுந்தர். 'நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஜாதி முதல்

ஜாதி முதல்

'தன்னை உயர்ந்த சாதியென எண்ணிக்கொண்டு, தனக்கு மேலே உயர்ந்தவர்கள் யாருமில்லையெனக் கருதுபவர்கள், தனக்குக் கீழேயும் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என எண்ணிவிட்டால், ஒரு சிக்கலுமிராது' என்கிறார் ஐயா பெரியார். 'ஆரிய மார்க்கமான இந்து மதத்தை தமிழர்கள் ஏற்றதாலேயே, தாங்கள் தனித்தப்பேரினம் என்பதை மறந்துபோனார்கள். இந்து மதத்தில் தாங்களும் ஒரு பகுதியினரென்று கருதிக் கொண்டதாலேயே தன்மானத்தையும், தன்னாட்சியுரிமையையும் தமிழர்கள் இழந்துவிட்டார்கள்' என்கிறார் பேரறிஞர் அண்ணா. 'சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதிஉயர்ந்த மதிகல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!' எனப் பொதுமைப் பாடுகிறார் பெரும்பாவலன் பாரதி. 'யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒண்ணுதான்! ஆக மொத்தம் நீயும், நானும் பத்து மாதம்தான்' எனப் பேதங்களைச் சாடுகிறார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'சாதிவெறி சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோயே! இடைவந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! எனப்பாடுகிறார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். மூத்தோர்களும், முன்னோர்களும் உதிர்த்த இத்தகையக் கூற்றுகளின் மூலம் சாதியக்கட்டமைப்பும், வருணாசிரமக்கோட்பாடுகளும் தமிழர்களின் அறநெறிக்கு மட்டுமல்லாது, இறைநெறிக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

ஆ. ராசா பேச்சு

ஆ. ராசா பேச்சு

வர்ணாசிரமத்தின் பெயரால் பல நூறு ஆண்டுகளாக மண்ணின் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ளப் பழிச்சொல்லை தாங்கிய வலியின் மொழிதான் அண்ணன் ஆ.ராசா அவர்களது வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகாலமாக இழித்துரைக்கப்பட்டதைத்தான் இன்றைக்கு அவர் எடுத்துரைத்திருக்கிறார். அதனை எடுத்துக்கூறியதற்கே, மதவெறியர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதென்றால், எங்களை சூத்திர மக்களாக்கி இழிமகனெனப் பன்னெடுங்காலமாகப் பேசி வரும்போது எங்களுக்கு எவ்வளவு வலியும், கோபமும் இருந்திருக்கும்? தமிழர்கள் மீதான சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைப் போக்க வேண்டுமெனவே அவர் சாடினாரே ஒழிய, இறை நம்பிக்கையுடைவர்களை தவறாக விமர்சித்துப் பேசவில்லை. ஒர் மதத்தைத் தாங்கி நிற்பதாலேயே, சூத்திரப்பட்டத்தைச் சுமத்தி, தாசி மக்கள், வேசி மக்கள், இழி மக்களென எங்களைப் பழித்துரைப்பார்களென்றால், அதனை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? மதத்தின் பெயரால் மண்ணின் மக்கள் எங்களை இழிமகனென விளிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தக் கேள்வியைத்தான் அண்ணன் ஆ.ராசா அவர்கள் எழுப்பியிருக்கிறார்., என்று சீமான் குறிப்பிட்டு இருந்தார்.

கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் ஆ. ராசாவை நாங்கள் எதிர்க்கிறோம். சீமான் எங்களை என்ன செய்து விடுவார்? ஹான்? அவரால் எங்களை என்ன பண்ண முடியும்? ஒரு ஊரில் வந்து எங்களை ஏதாவது பண்ண சொல்லுங்கள் பார்க்கலாம். எங்களை என்ன பண்ண முடியும் அவரால்? அப்படி எல்லாம் யாரும் யாரையும் மிரட்ட முடியாது?

ஆ. ராசா

ஆ. ராசா

ஜனநாயக நாட்டில் நாம் இருக்கிறோம். இப்போது மனுநீதியை கடைபிடிக்கிறோமா? நாம் அரசியலமைப்பு சட்டத்தை நாம் கடைபிடிக்கிறோம். அப்படி இருக்கும் போது ஒரு மதத்தில் முன்னர் சொல்லப்பட்ட விஷயங்களை பற்றி பேசுவது ஏன்? அது சரியா? தவறா? என்று நான் பேச விரும்பவில்லை. இந்து மதத்தில் தவறு இருக்கிறது என்றால், அதை பேசும் நீங்கள், மற்ற மதத்தில் இருக்கும் தவறுகளையும் சேர்த்து பேசுங்கள், என்று கருப்பு முருகானந்தம் விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+