"பாஜகவினர் புழுகுமூட்டைகள்" சைதை சாதிக் பேசும்போது நான் சிரித்தேனா? கொந்தளிக்கும் மனோ தங்கராஜ்!
சென்னை: திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசிய போது, தான் சிரித்துக் கொண்டிருந்ததாக வெட்டி ஒட்டிய வீடியோவை பாஜக பரப்பி வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவை சேர்ந்த பிரபல பேச்சாளரான சைதை சாதிக் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இழிவாக பேசிய சைதை சாதிக்
இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார். இந்த வீடியோ குறித்து நடிகை குஷ்பு இதுதான் திராவிட மாடலா என்று கேள்வி எழுப்பியதற்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ட்விட்டரில் மன்னிப்பு கோரினார். இருந்தும் இந்த விவகாரத்தை பாஜக எளிதாக விடவில்லை.

பாஜக ஆர்ப்பாட்டம்
இதனைத் தொடர்ந்து பாஜகவின் நடிகைகள் குஷ்பூ,காயத்ரி ரகுராம், கவுதமி, நமிதா ஆகியோரை மிகவும் கேவலமாக பேசிய திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தி பாஜக மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

மனோ தங்கராஜ் மீது குற்றச்சாட்டு
இதுமட்டுமல்லாமல் திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பெண்களை அவதூறாக பேசியதை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர் குஷ்பு தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜகவினர் புழுகுமூட்டைகள்
அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,வருந்ததக்க வகையில் ஒருவர் மேடையில் பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்ததாக வெட்டி ஒட்டி சித்தரித்து பொய்யான ஒரு வீடியோவை பரப்புகின்றனர் பாஜகவினர். இதில் வியப்பு ஏதும் இல்லை! இந்த விஷயத்தில் கூட வெட்டி ஒட்டி பேசும் பாஜகவினர் உண்மையாகவே புழுகுமூட்டைகள் தான் என்று விமர்சித்துள்ளார்.

மனோ தங்கராஜ் விளக்கம்
முன்னதாக அமைச்சர் மனோ தங்கராஜ், சைதை சாதிக் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் நான் அந்த மேடைக்குச் சென்றேன். அவர் பேசிவிட்டு வந்து அமர்ந்ததும் இது போன்று பேசுவது சரியல்ல' என மேடையில் வைத்தே அவரைக் கண்டித்தேன். நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன் ஆனால் தரம்தாழ்ந்து யாரையும் விமர்சித்துப் பேசியதில்லை.

விளம்பரம் தேடும் குஷ்பு
பெண்களை இழிவாகப் பேசுவது என்பதில் எனக்கோ, கழகத்துக்கோ உடன்பாடு இல்லை, அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி வருத்தம் தெரிவித்த பின்னரும், தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications