நேராக எடப்பாடி வீட்டிற்கு போன நயினார்.. கூடவே சென்ற இணையமைச்சர் எல் முருகன்.. திடீர் ஆலோசனை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் திடீரென நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் உடன் இருந்தார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் ரீதியாக நடைபெறும் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. இந்தச் சந்திப்பு தொடர்பாக முழுத் தகவல்களைப் பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் தொடக்கத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளுமே தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. அதிமுக மற்றும் பாஜக இணைந்து வலுவான என்டிஏ கூட்டணியை உருவாக்கி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

திடீர் சந்திப்பு
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற நயினார் நாகேந்திரன், அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் மத்திய அமைச்சர் எல் முருகனும் உடன் சென்றார்.
தமிழ்நாடு தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கா பிரச்சாரம் செய்ய வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். அப்போது என்டிஏ கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்யவுள்ளார். பிரதமர் மோடியின் தமிழகப் பயணம் குறித்தும் அதற்குச் செய்யும் ஏற்பாடுகள் குறித்தும் எடப்பாடி- நயினார் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
என்ன காரணம்
இப்போது வரை என்டிஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. ஏற்கனவே அதிமுக தலைவர்களும் சரி, பாஜக தலைவர்களும் சரி கூட்டணிக்குள் வேறு சில கட்சிகளும் வரலாம் எனத் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இதற்கிடையே பிரதமர் மோடியின் மார்ச் மாதத் தமிழகப் பயணத்திற்கு முன்பு கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக முடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரம்மாண்டம்
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியின் போது அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மேடையில் ஏற்றி, பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் என்டிஏ தலைவர்கள் கூட்டாக மேடை ஏறியிருந்தனர். அந்த மேடையில் மிஸ் ஆன கட்சிகளையும் அழைத்து வந்து, மார்ச் 1ம் தேதி மேடை ஏற்ற திட்டமிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் இது தொடர்பாகவும் இரு தரப்பும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி விவகாரத்தை இறுதி செய்யும் பணிகளை அதிமுகவும் என்டிஏவும் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications