பணம் இருந்தால்தான் பதவி.. ஊர்ஜிதமான உண்மை? ஆதாரமே இருக்காம்! மீண்டும் வெடித்துக் கிளம்பிய விவகாரம்!
சென்னை : பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும், கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கட்சி ஒருபோதும் வளராது எனத் தெரிவித்து, பாஜக பொருளாதார பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ண பிரபு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு பாஜகவில் பொறுப்புகளில் நியமிக்க பணம் கேட்கப்படுவதாக பலரும் குற்றம்சாட்டியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகிய பாஜக பெண் நிர்வாகியும், பாஜகவில் பதவி வேண்டுமானால் பணம் கேட்பதாக குற்றம்சாட்டி இருந்தார். ராமநாதபுரம் மாவட்ட பாஜகவிலும், பொறுப்புகளில் நியமிக்க பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆருத்ரா மோசடி வழக்கில் சிக்கிய விளையாட்டுப் பிரிவு மாநில நிர்வாகி ஹரீஷ், மோசடி செய்த பணத்தை பாஜகவில் கொடுத்தே மாநில பொறுப்பைப் பெற்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு பணம், யாரிடம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹரீஷிடம் இருந்து பணம் பெற்றதாக பாஜக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அலெக்ஸ் மற்றும் பாஜக ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் ஆகியோர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர். ஹரீஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சிலரும் கைது செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆருத்ரா மோசடியை சுட்டிக்காட்டி பாஜகவிலிருந்து அக்கட்சியின் பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணா பிரபு இன்று ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரும், பாஜகவில் பணம் கொடுத்தால் தான் பதவி என்ற நிலை உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில பொருளாதார பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு, அண்ணாமலையை நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை விட்டுள்ளார். தொண்டர்கள், நிர்வாகிகளிடம் இருந்து பணம் வசூலிக்க சொல்லியும், மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் விதமான அரசியல்களை நடத்திக் பல கொண்டிருக்கிறீர்கள். எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக எங்களை வற்புறுத்தி சில விஷயங்களையும், கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும் என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்னல்களுக்கு ஆளோகிறோம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர். இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. நீங்கள் சரிவர செயல்படவில்லை. பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன என்றும் கிருஷ்ண பிரபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications