காலி ஆகும் பாஜக கூடாரம்.. பக்குவம் இல்லாத தலைவரா அண்ணாமலை?
சென்னை: அடுத்தடுத்த நெருக்கடியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துவருகிறார். பாஜக ஐடி விங்க் தலைவர் சிடிஆர் நிர்மல் குமார், அதிரடியான குற்றச்சாட்டுக்களை அண்ணாமலை மீது வைத்த கையோடு வெளியேறி அதிமுகவில் இணைந்திருக்கிறார்.
வெளியேறியவர், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டுச் சென்றுள்ளார். மிக மோசமாக '420மலை' என விமர்சித்திருக்கிறார்.
நிர்மல் வெளியேறிய போது 'நீங்கள் போய்வாருங்கள் நாங்கள் தலைவருடன் இருக்கிறோம்' என்று சொன்ன மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன், அடுத்த 24 மணிநேரத்திற்குள் கனத்தை இயத்துடன் வெளியேறி இருக்கிறார். 'அண்ணாமலை கெட்ட வார்த்தைகளைக் கூறி திட்டுவதாக' தனது பேட்டிகளில் விளக்கி வருகிறார்.
பாஜகவைவிட்டு வெளியேறுபவர்கள் அனைவரும், அந்தக் கட்சி சொந்த நிர்வாகிகளையே வேவு பார்க்கிறது என்றே சொல்கிறார்கள். அது காயத்ரி ரகுராம் முதல் நிர்மல் வரை தொடர்கிறது. ஆனால், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'எங்கு இருந்தாலும் வாழ்த்துகள்' என்று நாகரிகமாக அறிக்கை வெளியிட்டு வழி அனுப்பிவைத்திருக்கிறார்.
அதிகாரி டு அரசியல்வாதியான அண்ணாமலை வந்தபோது ஊடகங்களில் அவருக்கு அதிகமான ஆதரவு இருந்தது. எந்த ஊடகத்தைவைத்து அவர் வளர்ந்தாரோ அதே ஊடகத்தைப் பின்னர், மிகக் கடுமையாக அவர் விமர்சித்தார். அதற்கு எல்லாம் அனுபவம் இன்மைதான் காரணம் என்கிறார்கள் பலர். ஆனால், இது அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான போட்டி என்கிறார்கள் சிலர்.
மேற்கு மண்டலத்தில் யாருக்குச் செல்வாக்கு என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் ஒரு போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதை உணர்த்தும் வகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக ஒருங்கிணையாததுதான் காரணம் என்ற ரீதியில் அண்ணாமலை பேட்டி அளித்தார். அந்தக் குற்றச்சாட்டை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, 'அப்படி ஒன்றும் அவர் சொல்லவில்லையே' என்று ஒருவரி சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார்.

ஆழி செந்தில்நாதன் கருத்து:
சொந்தக் கட்சிக்குள் குழப்பம், அதிமுகவுடன் உரசல் என இரண்டு பக்கமும் நெருக்கடி இப்போது அண்ணாமலைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அது குறித்து முதலில் ஆழி செந்தில்நாதனிடம் பேசினோம். அவர், "முதலில் எனக்கு அண்ணாமலைக்கு அரசியல் தலைமைப் பண்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை.
அப்படி ஒரு தலைமைப் பண்பு உள்ளவரைப் போட்டு முறையாகக் கட்சியை நடத்த வேண்டும் என்ற விருப்பம் அந்தக் கட்சியின் தலைமைக்கே உள்ளதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது.
அதனால் பரபரப்பாக ஏதாவது செய்தால் போதும் எனத் தலைமையே நினைக்கிறது. அதற்குத் தீனிப்போடும் நபராக அண்ணாமலை இருக்கிறார்.
வெறும் ஐடி வார் ரூமை வைத்துக் கொண்டு கட்சி நடத்த முடியாது. கட்சிக்குத்தான் ஐடி விங்க் தேவை. ஐடி விங்கே கட்சி ஆகிவிடாது. ஆனால் அண்ணாமலை ஐடி விங்க்தான் கட்சி என நம்புகிறார்.
இவருடன் இருந்த யாருமே பெரிய ஆட்கள் கிடையாது. எல்லாம் சமூகவலைத்தளத்தில் இயங்கி வருபவர்கள். மக்கள் மத்தியில் கட்சியைக் கொண்டு சேர்க்க இவர்களிடம் ஏதாவது திட்டம் உள்ளதா? மக்கள் பிரச்சினையை முன்வைத்து ஏதாவது போராடி இருக்கிறார்களா? இல்லையே?
இந்திய அளவில் ஒருங்கிணைக்கும் திறனில் சிறந்த கட்சியாக பாஜக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்களால் யாரையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. தேசிய தலைமையே தமிழ்நாட்டில் ஏதாவது சர்ச்சை செய்து கொண்டிருந்தால் போதும், கட்சியை ஒன்றும் வளர்க்கத்தேவை இல்லை என எண்ணுகிறதோ என நான் சந்தேகப்படுகிறேன். ஏனென்றால், இவர்களில் செயல்பாடு அப்படித்தான் இருக்கிறது" என்கிறார்

பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
இது குறித்துப் பேசிய பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், "அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை. அதை அவரது செயல்பாடுகளை வைத்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு ஒன்றும் அதிக வயதில்லை. 35 வயதுதான். ஆகவே சில போதாமைகள் உள்ளன.
ஆனால் அவரை பாஜகவின் தலைமை விரும்புகிறது. மோடியும் அமித்ஷாவும் விரும்புகிறார்கள். அவருக்கு மேலிடத்தில் ஆதரவு உள்ளது. அதைவைத்துக் கொண்டு அவர் யார் வெளியே சென்றாலும் பரவாயில்லை என நினைக்கிறார். அவர் மட்டுமே கட்சியிலிருந்தாலும் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நம்புகிறார்.
ஆனால், ஒரு கட்சியில் பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். அவர்களால் கட்சிக்கு வேறுவேறு விதங்களில் முக்கியத்துவம் இருக்கும். ஒருவர் தனது சாதி பலத்தால் கட்சிக்குத் தேவைப்படலாம். அல்லது வேறு பலத்தால் கட்சிக்குத் தேவைப்படலாம். இவை எல்லாம் சேர்ந்ததுதான் அரசியல்.
ஆகவே அதை அண்ணாமலை உணர வேண்டும். ஒருவர் தனக்கு எதிராக இருக்கலாம். இன்னொருவர் அவருக்கு ஆதரவாக இருக்கலாம். இப்படி அனைவரையும் சேர்த்துத்தான் கட்சியை ஒரு தலைவர் அரவணைக்க வேண்டும்.
ஒருவர் கட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். அவரது பங்களிப்பை உணர்ந்ததால்தான் கட்சி அவரை வைத்திருந்தது. அப்படி ஒரு பலனும் இல்லை என்று யாரையும் ஒதுக்க நினைக்கக் கூடாது. அது அனுபவக் குறைபாட்டால் வருவதுதான்" என்கிறார்.

பத்திரிகையாளர் ப்ரியன்:
பத்திரிகையாளர் ப்ரியன், "2019 இல் இருந்தே பாஜகவின் தயவு அதிமுகவுக்குத் தேவைப்பட்டு வருவதை நாம் பார்த்துவருகிறோம். ஆனால் சமீபமாக எடப்பாடி பழனிசாமி, தனக்கு பாஜகவுடன் அதிக நெருக்கம் இல்லை என்பதைப்போல ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்.
அதுவும் ஈரோடு தேர்தலுக்குப் பின் அவர் இஸ்லாமிய மக்களைக் கவர்வதற்காக இந்த வியூகத்தை வகுக்கிறார். அந்தத் தோற்றத்தை இஸ்லாமிய மக்கள் ஏற்கமாட்டார்கள். அந்தளவுக்கு எளிதாக அவர்களை ஏமாற்றிவிட முடியாது என்றே சொல்வேன்.
ஈபிஎஸ் ஐ விட இப்போது ஓபிஎஸ் பாஜகவுக்கு அதிக நெருக்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். குறிப்பாக ஈரோடு இடைத்தேர்தல் சமயத்தில், பாஜக வேட்பாளர் அறிவித்தால் நாங்கள் எங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெறுவோம் என்று சொல்லும் அளவுக்குப் போனார் ஒபிஎஸ். ஆகவே ஈபிஎஸ் கொஞ்சம் பாஜக உறவில் கொஞ்சம் இடைவெளி இருப்பதைப் போலக் காட்டுகிறார்.
மேலும் நாம் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தால், வரும் தேர்தல்களில் எடுத்த எடுப்பிலேயே 13% வாக்குகளை நாம் இழந்துவிடுவோம் என்று நம்பத் தொடங்கியுள்ளார் என்பது அவரது சமீபத்திய செயல்பாடுகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. இந்த யுக்திகளை அவர் தீவிரமாகச் செயல்படுத்தவில்லை.
மேலும் ஈபிஎஸ் ஒருபோதும் பாஜகவைவிட்டு எந்தநிலையிலும் வெளியே வரமுடியாது. அப்படி வந்தால் கொங்கு மண்டல அதிமுகவில் ஒரு பெரிய பிளவு ஏற்படும் என்பதே உண்மை. அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோதே அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இருந்த சோழவந்தான் மாணிக்கம் என்பவர் பாஜகவில் போய்ச் சேர்ந்தார். அவர் ஓபிஎஸ் அணியிலிருந்தவர். அவர் செல்லும் போது இந்தச் சலசலப்பு உருவாகவில்லை.
பொதுவாக ஒரு கூட்டணிக்கட்சியிலிருந்து மற்றொரு கூட்டணிக் கட்சிக்கு ஒருவர் கட்சி தாவும் போது அக்கட்சியிலுள்ள தலைவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். ஆனால், விருப்பம் தெரிவித்த உடனேயே நிர்மல் குமாரை அழைத்துச் சந்திக்கிறார். கட்சியில் இணைத்துக் கொள்கிறார்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். அண்ணாமலை கூட்டணியிலிருந்து கொண்டே, ஈபிஎஸ் சரியான வேட்பாளரைப் போடவில்லை. ஆகவே தோல்வி என்ற கருத்தை முன்வைக்கும் போது இந்தத் தாவல் நடக்கிறது.
நிர்மல் குமார் கட்சியைவிட்டு விலகும்போது வெளியிட்ட கடிதத்தில், அண்ணாமலை மீது மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார். 420மலை என்று சொல்லும் அளவுக்குக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நிர்மல் குமார் 2009இல் இருந்தே பாஜகவில் இருக்கிறார். மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு முன்பாக இருந்து கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர் அவர். அப்படிப்பட்ட அவர்தான் அண்ணாமலை மீது இந்த மோசமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் அதை நாம் கவனிக்கவேண்டும்.

பத்திரிகையாளர் ஜென் ராம்:
இந்த மோதல் போக்கு பற்றி நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜென் ராம், "பாரதிய பண்பாட்டைத் தமிழ்நாட்டில் கொண்டு வரப் போகிறோம் என்ற முழக்கத்தோடு இயங்க ஆரம்பித்த ஒரு கட்சி பாஜக. அதில் உள்ள சக கட்சி தோழர்களையே நம்பாமல் வேவு பார்க்கிறார்கள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.
இதற்கு முன்னால் இருந்தே தமிழ்நாடு பாஜகவில் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாருமே இப்படி சக கட்சி தோழர்களை ஐடி விங்க் மூலம் வேவு பார்த்ததில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஒரு கட்சிக்குள்ளேயே வேவு பார்த்தல் என்ற விவகாரம் என்பது அந்தக் கட்சியை அதலபாதாளத்திற்குக் கொண்டுபோகவே உதவும் என்றே நமக்குத் தோன்றுகிறது.
மேலும் திமுக கூட்டணி மீது மக்களுக்கு நம்பகத்தன்மை கூடிக்கொண்டே போகிறது. அதைக் குறைத்தால்தான் அதிமுக கூட்டணி வளரமுடியும். முதலில் திமுக கூட்டணியை உடைக்க யுக்திகளை வகுப்பார்கள்.
அப்படி இல்லாத பட்சத்தில் பாஜக, அதிமுக மோதல் மூலம் ஒரு தோற்றத்தை உருவாக்கி முன்னேறப் பார்ப்பார்கள். அப்படியான பட்சத்தில் எடப்பாடி உட்படச் சிலர் மீது ஐடி ரெய்டு வரவும் வாய்ப்பு உள்ளது. அப்படி ரெய்டு நடந்தால், அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ஒரு மோதல் தோற்றம் உருவாகும்.
எப்படி ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் டிடிவி தினகரன் வீட்டில் ரெய்டு நடந்ததால் அவருக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டதோ, அதேபோல எடப்பாடிக்கு ஆதரவான ஒரு அலை தமிழ்நாட்டில் வரலாம். அதற்கான முயற்சியாக பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான மோதல் கட்டமைக்கப்படும். தேர்தல் வியூக வகுப்பாளர்கள் அப்படி ஏதேனும் திட்டம் போட்டுத் தந்திருக்கலாம்" என்கிறார்
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
எப்படி வெளியே போச்சு? ஆனந்திடம் கடுகடுத்த விஜய்! இரவோடு இரவாக முக்கிய மீட்டிங்! வெளியாகும் அறிவிப்பு -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
உங்க விஜய் நான் வர்றேன்.. தனித்தே களமிறங்கும் தவெக! எந்த தொகுதியில் யார் யார் போட்டி? லீக்கான தகவல்! -
நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications