"தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால்'.. நாராயணன் திருப்பதி நேரடி அட்டாக்
சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டத்தில், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும், தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை வைத்துக் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளது நகைப்புக்குரியது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். சந்தர்ப்பவாதஅரசியல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு திங்கள்கிழமை டெல்லியில் நடந்தது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டன.
இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "சமூகரீதியாக, கல்விரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கிவிடுவதுதான் சமூக நீதிக்கான வரையறை. சமூக நீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டதால் தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் நாம் இணைத்திருக்கிறோம்.

பொருளாதார ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு எனும் சமூக நீதி கருத்தியலால்தான் அதை நிலைநிறுத்த முடியும். ஆனால் பாரதிய ஜனதா அரசு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு, Economically என்பதை வஞ்சகமாக இந்த இட ஒதுக்கீடோடு சேர்த்துவிட்டது. ஏழை, பணக்காரன் என்ற சூழல் மாறிக்கொண்டேயிருக்கும். எனவே, பொருளாதாரரீதியில் இட ஒதுக்கீடு என்ற அளவுகோல் சரியான அளவுகோலல்ல.. அது சமூகநீதியுமல்ல".. என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்,

நகைப்புக்குரியது
இதற்கு தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்றைய தினம், அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு என்ற கூட்டத்தில், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதாகவும், தடுக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளது நகைப்புக்குரியது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு வாக்களித்து சட்டமாக்க ஆதரவளித்த காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களை உடன் வைத்து கொண்டு இந்த 'வசனத்தை' அவர் பேசியிருப்பது அரசியலுக்காக சமூக நீதியை தி மு க உள்ளிட்ட கட்சிகள் குழி தோண்டி புதைத்து கொண்டிருப்பதை வெளிக்காட்டுகிறது.

கம்யூனிஸ்ட்
தைரியமிருந்தால், திராணியிருந்தால், முதுகெலும்பிருந்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்று சொல்லட்டும் அல்லது அதற்கு ஆதரவளித்தால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணியை முறித்து கொள்கிறோம் என்று தி மு க அறிவிக்கட்டும். அதை விடுத்து மக்களை முட்டாள்கள் என்று எண்ணி பாராளுமன்றத்திலே சட்டமாக்கி விட்டு பின்னர் தி மு கவின் தயவிற்காக கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்கப்பட வேண்டும்.

தகுதி இல்லை
தீண்டாமை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறியடிக்கும் மருந்தாக இருப்பது தான் சமூக நீதி என்று முழங்கியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேங்கை வயலில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த குற்றவாளிகளை இன்று வரை கைது செய்ய முடியாத நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சமூக நீதி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? தீண்டாமை குறித்தும் சமூக நீதி குறித்தும் பேசுவதற்கான தகுதியை, தார்மீக உரிமையை இழந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்" இவ்வாறு நாராயணன் திருப்பதி விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications