ரூ.34 லட்சம் வசூலித்து மோசடி-பாஜக ஆதரவாளர் கார்த்தி கோபிநாத் கைது- அண்ணாமலை,எச்.ராஜா கண்டனம்
சென்னை: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கோவிலை புனரமைப்பதாக கூறி ரூ34 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவில் சிலைகளை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் உடைத்ததாக எழுந்த புகாரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அப்போது மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆனால் மாற்று மதத்தினர்தான் கோவில் சிலைகளை இடித்து தள்ளியதாக இந்து அமைப்பினர் புகார் தெரிவித்தனர். அத்துடன் பாஜக ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் இணையம் மூலம் சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்கப் போவதாக கூறி நிதி வசூல் செய்தார்.

கார்த்திக் கோபிநாத் கைது
கார்த்தி கோபிநாத் மொத்தம் ரூ34 லட்சம் வசூல் செய்ததாகவும் இத்தொகையில் அவர் மோசடி செய்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை ஆவடி போலீசார் கார்த்தி கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கார்த்திக் கோபிநாத்தின் கூட்டாளிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அண்ணாமலை கண்டனம்
கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமது ட்விட்டர் பதில், தங்களுக்கு எதிரான குரல்களை ஒடுக்க திமுக அரசு முயற்சிக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் நான் பேசினேன். கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக நிற்போம். தமிழக பாஜகவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பர் என்றார் அண்ணாமலை.

எச்.ராஜா கண்டனம்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், கார்திக் கோபிநாத் கைது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இந்துக்களோ இந்து கோவில்களோ பாதிக்கப்பட்டால் அதற்கு உதவிட யாரும் முன்வரக்கூடாது என பயமுறுத்தும் இந்து விரோத அரசின் வன்மத்தின் வெளிப்பாடு என விமர்சித்துள்ளார்.

எஸ்.ஆர்.சேகர் ட்வீட்
தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், இக்கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், தம்பி
@karthikgnath-ன் கைது கோழை @arivalayam அரசின் மிரட்டல் செயல்; @BJP4TamilNadu @annamalai_k யின் வெற்றி இலக்கை விரைவாக எட்ட தொடர்ந்து உதவும் @mkstalin அரசுக்கு நன்றி. பாஜக விற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தம்பி கோபிநாத் தை விடுவிக்க அனைத்து சட்ட உதவிகளையும் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் விளக்கம்
இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்ட அறிக்கையில், கார்த்திக் கோபிநாத், இளையபாரதம் என்ற பெயரில் you tube சமூக வலைதளத்தில் Milaap fund raiser site என்பதன் மூலமாக சிறுவாச்சூர் கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனர் அமைப்பதற்காக வேண்டி இந்து அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களை ஏமாற்றி நிதி திரட்டி அதை தனது சுயலாபத்துக்காக பயன்படுத்தி கொண்டுள்ளார் என்று புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications