Exclusive: என்னாது திமுகவில் சேரப்போறேனா.. பாஜக வானதி சீனிவாசன் பளீர் பதில்
சென்னை: திமுகவில் இணைவதாக வந்த வதந்திகளுக்கு கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் என்னை பற்றி அவதூறு பரப்புவோர் குறித்து ஆராய விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு கட்சி தலைமை அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாகவும் இதனால் அதிருப்தியில் அவர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைவதாகவும் வதந்திகள் பரவின.
அமைச்சர் செந்தில் பாலாஜி, வானதியிடம் திமுகவுக்கு வருவது குறித்து தீவிரமாக பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது. கோவை மாவட்டத்தின் திமுக தேர்தல் பொறுப்பாளராக உள்ளவர் செந்தில் பாலாஜி. கோவையை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவரிடம் சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

சிக்கீமில் கட்சி பணி
இதுகுறித்து சிக்கீமில் கட்சி பணியாற்றி கொண்டிருக்கும் வானதி சீனிவாசனை தமிழ் ஒன் இந்தியா சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில் நான் திமுகவுக்கு செல்வதாக கூறுவதெல்லாம் வதந்தி. இதற்கெல்லாம் நான் பதில் சொல்லவும் விரும்பவில்லை.

வதந்திகள்
இந்த வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்பதையெல்லாம் நான் ஆராய விரும்பவில்லை. மாணவரணியில் இருந்த என்னை தேசிய மகளிரணித் தலைவியாக பாஜக அங்கீகரித்துள்ளது. என்னை நம்பி கோவை தெற்கு தொகுதி மக்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே எனக்கு கட்சி பணியும் தொகுதி பணியும் நிறைய இருக்கிறது.

சிக்கீமில் கட்சி பணியில் உள்ளேன்
இப்போது கூட சிக்கீமில் கட்சி பணியாற்றி கொண்டிருக்கிறேன். எனவே என்னை பற்றிய வதந்திகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இந்த வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கள் என்றார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

சீனியர்கள் அறிவுரை
மேலும் அண்ணாமலை தன்னை விட சீனியர்களாக உள்ள நிர்வாகிகளிடம் எந்த விஷயத்திலும் ஆலோசனை கேட்பதில்லை என்ற புகாரும் அவர் மீது வைக்கப்படுகிறது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது கோவை உக்கடம் அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், மூத்த நிர்வாக சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கோவை ஆர்ப்பாட்டம்
இது கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்காமல் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகிகளான வானதி, சிபிஆர் உள்ளிட்டோர் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கோவை ஆர்ப்பாட்டம் குறித்து உங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்ற தகவல்கள் வருகிறதே இது குறித்து உங்கள் கருத்து என்ன என அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வானதியை சுற்றும் வதந்தி
அதற்கு அண்ணாமலை பதிலளிக்கையில் அப்படியெல்லாம் இல்லை. நான் மாநில தலைவர். ஒவ்வொரு விஷயத்திற்கு என்னிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலை வைத்துதான் வானதி சீனிவாசன் திமுகவுக்கு போவதாக சிலர் வதந்திகளை கிளப்பினர். சில யூடியூபர்களும் இந்த சம்பவத்தை ஆணித்தரமாக கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் வானதி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications