"கொஞ்சம் பொறுமையா இருங்க.." விஜய்க்கு தூதுவிட்ட பாஜக.. பறந்த முக்கிய அட்வைஸ்.. அடுத்த பிளான் என்ன?
சென்னை: கரூரில் விஜய் பிரச்சாரத்தில் நடந்த மோசமான சம்பவத்திற்குப் பிறகு தமிழக அரசியல் களம் மெல்ல மாறி வருவது போலவே தெரிகிறது. பாஜக தரப்பு விஜய்யை தொடர்பு கொண்டு சில விஷயங்களைச் சொல்லியுள்ளது. விஜய்யிடம் பாஜக செல்வது ஏன்.. பாஜக பிளான் என்ன.. தமிழக அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மாதம் கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தபோது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விஜய்யை பார்க்க வந்த கூட்டம் ஒருவர் மீது ஒருவர் விழ மிக மோசமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். தமிழ்நாட்டை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்துக்குப் பிறகு விஜய் கட்சிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

பாஜக அட்வைஸ்
இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் தரப்பை பாஜக தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் விஜய் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பயன்படுத்த பாஜக திட்டமிடுகிறது. திமுகவை அனைத்துத் தரப்பும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும் என்றும் இதற்குச் சற்று பொறுமையாக இருக்குமாறும் விஜய்க்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தூதுவிடும் பாஜக
தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் தங்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று விஜய் அறிவித்திருந்தார். ஆனால் தற்போதைய சம்பவங்களை வைத்துப் பார்த்தால் உத்திகளை மாறும் என்றே தெரிகிறது.. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெகவை கொண்டு வர பாஜக தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது.
இதன் காரணமாகவே கரூர் நெரிசலுக்குப் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி உடனடியாக எம்பிக்கள் குழுவை கரூருக்கு அனுப்பியது. அங்குப் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாகக் கருத்துக் கேட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் எனக் குற்றஞ்சாட்டியது.
தீவிரமாக நடக்கும் பணிகள்
இது ஒரு பக்கம் இருக்கப் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஜே பாண்டா நாளை அக்டோபர் 6ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கவுள்ளார். அதேபோல தமிழக மாஜி பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில், கரூர் சம்பவம் குறித்து கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளித்தார்.
பாஜக திட்டம்
அடுத்தாண்டு தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஆட்சி எதிர்ப்பு அலை உருவாகும் என்று பாஜக தலைமை கருதுகிறது. அந்த எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதே பாஜகவின் விருப்பம். மேலும், தேமுதிக மற்றும் நாம் தமிழர் வாக்குகளில் கணிசமான சதவிகிதம் விஜய் பக்கம் வரலாம் என்றும் பாஜக கருதுகிறது. இதன் காரணமாகவே விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயல்கிறது. அதேநேரம் அதிமுக உடனான கூட்டணி பாதிக்கப்படுவதையும் பாஜக விரும்பவில்லை. இதன் காரணமாகவே மிகப் பொறுமையாக இந்த விஷயத்தை அணுகி வருகிறது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே திமுக மற்றும் அதிமுக தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைத் தாண்டி தேசிய கட்சிகளால் கால் பதிக்க முடியவில்லை. அதேநேரம் விஜய்யும் கூட கூட்டணி ஆட்சிக்கு ஓகே என சொல்லியிருந்த நிலையில், தேசிய கட்சிகள் மெல்ல விஜய் பக்கம் போகிறது. கரூர் பேரழிவுக்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் அதையே தான் காட்டுகிறது!












Click it and Unblock the Notifications