தயங்கும் ஓபிஎஸ்.. அண்ணாமலை தரப்பில் விடுக்கப்பட்ட அழைப்பு.. சென்னை வரும் பிஎல் சந்தோஷை சந்திப்பாரா?
சென்னை: சென்னையில் தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகளுடன் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் பிஎல் சந்தோஷ் - ஓபிஎஸ் சந்திப்புக்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இதுவரை பிஎல் சந்தோஷ் உடனான சந்திப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.
அண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதாக அறிவித்தார். தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்திக்க முயன்றும் ஓபிஎஸ்-க்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஆதங்கத்தில் இருந்த ஓபிஎஸ், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதன்பின் பாஜக உடனான கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அறிவித்தார். தொடர்ந்து பாஜகவையும், பாஜகவின் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். இது தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களை மையப்படுத்தியே பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
முக்குலத்தோர் சமூக ஆதரவு பாஜகவுக்கு இல்லையென்றால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பை மீண்டும் பாஜக கூட்டணியில் இணைக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் மீண்டும் பாஜகவுடன் இணையவே விரும்புவதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளுடன் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சட்டசபைத் தேர்தல் மற்றும் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழக பாஜகவில் மிகவும் முக்கியமான ஆலோசனை கூட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நேற்று இரவே அண்ணாமலை தொலைப்பேசி மூலமாக ஓபிஎஸ் உடன் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை வரும் பிஎல் சந்தோஷை சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆனால் ஓபிஎஸ் தரப்பில் அண்ணாமலைக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. நேற்றிரவே சென்னைக்கு ஓபிஎஸ் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மதுரை விமான நிலையத்திற்கு கூட ஓபிஎஸ் வரவில்லை. இதனால் இன்று ஓபிஎஸ் சென்னைக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிஎல் சந்தோஷை ஓபிஎஸ் சந்திக்கும் நிலையில், பாஜக உடனான கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications