பாஜக ஓட்டிய மோடி ‘ஸ்டிக்கர்’! ஸ்பிரே அடிச்சிபுடுவேன்.. மை பூசிய தபெதிக! அதிரடியாக கைது செய்த போலீஸ்!
சென்னை : சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை ஒட்டிய நிலையில் அதன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு மை பூசிய நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட தபெதிக இயக்கத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட்
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு.

பிரதமர் மோடி
இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 28 ஆம் தேதி சென்னை வர உள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர். தமிழ்நாடு அரசு தரப்பில் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மோடி ஸ்டிக்கர்
செஸ் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த நிலையில் சென்னையில் வைக்கப்பட்டு இருக்கும் செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்பட ஸ்டிக்கர்களை பாஜகவினர் ஒட்டிச் சென்றனர்.

கருப்பு மை
இதேபோல் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை அவர் ஸ்டிக்கராக ஒட்டினார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் பிரதமர் மோடியின் படத்தை ஒட்ட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தின் மீது பாஜகவினர் ஒட்டிய பிரதமர் நரேந்திர மோடி படம் மீது தந்தை பெரியார் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள் கருப்பு மை அடித்தனர்.

அதிரடி கைது
இந்த நிலையில் பிரதமர் மோடியின் புகைப்படங்களை மை பூசி அழித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினரின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியின் படத்தை மை பூசி அழித்ததாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர் அவரது கைது சம்பவத்திற்கு பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications