கொடைக்கானல் பங்களாவுக்கு அனுமதியின்றி ஜேசிபி, வெடிமருந்து.. பாபி சிம்ஹா மீது நண்பர் விதிமீறல் புகார்
சென்னை: கொடைக்கானலில் பேத்துப்பாறை ஊராட்சியில் நடிகர் பாபி சிம்ஹா விதிகளை மீறி பங்களா கட்டியுள்ளதாக அவரது நண்பர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பீட்சா , சூது கவ்வும், ஜிகர்தண்டா, இறைவி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சின்ஹா. இவர் தர்பார் படத்திலும் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். இவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு நெருங்கிய நண்பராவார். பாபிக்கு ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததற்கு தேசிய விருது கிடைத்தது.

இவர் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் சகோதரர் ஆவார். பாபி பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபிக்குச் சொந்தமாக 15 சென்ட் நிலம் இருக்கிறது.
இந்த நிலத்தில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டட பணிகளை கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜமீர் காசிம், முகமது உசேன் ஆகியோர் கவனித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கும் பாபிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்களுடன் சேர்ந்து கொண்டு பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் பாபியை மிரட்டியதாக தெரிகிறது.
வீடு கட்ட அதிக பணத்தை பாபியிடம் வாங்கிய ஒப்பந்ததாரர்கள் குறைந்த செலவில் வீடு கட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் பாபி சின்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறை ஒப்பந்ததாரர்கள் உள்பட 4 பேர் மீது கொலை மிரட்டல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாபி சின்ஹா விதிகளை மீறி பங்களா கட்டியதாக பாபி மீது நண்பர் உசேன் புகார் கூறியுள்ளார். இது குறித்து சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் உசேன் கூறுகையில், நானும் பாபியும் பள்ளி கால நண்பர்கள். கட்டட ஒப்பந்ததாரரான எனது உறவினரை நடிகர் பாபி சிம்ஹாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் உள்ள நடிகர் பாபியின் நிலத்தில் பங்களா கட்ட ரூ 1.50 கோடி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எனது உறவினருக்கும் நண்பருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஆகையால் அவருக்கு ஒப்பந்த தொகையில் பாதி வழங்கவில்லை.
இதுகுறித்து பாபியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் பாபி சிம்ஹா என் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி என் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாபி கட்டிய பங்களா விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. அதில் அனுமதி இல்லாமல் மலைப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் வெடி மருந்து போன்றவை கொண்டு செல்லப்பட்டது. அதற்கான ஆதாரமாக புகைப்படங்களும் உள்ளன என கூறிய உசேன், பாபி மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications