கொஞ்ச நேரத்துல குண்டு வெடிக்கப்போகுது.. சென்னையில் தனியார் பள்ளிக்கு மிரட்டல்! அலறி ஓடிய பெற்றோர்!
சென்னை: சென்னை கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் புகாரை அடுத்து பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாங்காடு அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடித்து விடும், இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து வந்த போலீசார், பள்ளி வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயழிலப்பு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அறிந்ததும் பதறி அடித்து, பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல காத்திருந்தனர். ஒவ்வொரு மாணவரின் பைகளையும் சோதனை நடத்தி, மாணவர்களை அனுப்பி வருகின்றனர். மின்னஞ்சலில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளியில் சுமார் 1000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 5 நாட்களே ஆகும் நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும், சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என இதுவரை கண்டறியப்படாத நிலையில், மீண்டும் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications