எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. உடனடியாக மோப்ப நாய்களுடன் இறங்கிய போலீசார்!
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்திய நிலையில், அது புரளி எனத் தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்த வெடிகுண்டு விரைவில் வெடிக்கும் என மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, உடனடியாக மோப்ப நாய் உதவியுடன், எடப்பாடி பழனிசாமியின் வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். ஆனால் எந்தவித சந்தேகத்துக்குரிய பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோர காவல்படை அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications