அண்ணா அறிவாலயம், அருண் விஜய், குஷ்பு வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்! சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலின் பேரில் அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது. அது போல் அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்புவின் வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
விஜயகுமாரின் மகன் அருண் விஜய், தனது மனைவி, மகன், மகளுடன் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் குண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் ஈமெயிலில் தகவல் வந்தது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், அருண் விஜய்யின் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
அந்த மெயிலில் , "கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்தை வெளியில் உள்ள நடிகர் எஸ்.வி.சேகர் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீஸார் 7 இடங்களிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை செய்ததில் அவை புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்மைக்காலமாக எஸ்.வி.சேகர் வீடு, முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகைகள் ஸ்வர்ணமால்யா வீடு, த்ரிஷா வீடு, விஜய் வீடு, தவெக அலுவலகம் ஆளுநர் மாளிகை என பல்வேறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு போய் தேடிய போது அது புரளி என தெரியவந்தது. எஸ்.வி.சேகரின் வீட்டிற்கு 7 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications