‘பூத் ஸ்லிப்’பில் அதிரடி மாற்றம். தேர்தல் ஆணையம் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் இனி வாக்காளரின் புகைப்படம் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே பூத் ஸ்லீப் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கி முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனாலும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை கொண்டு சேர்ப்பதில் அரசியல் கட்சிகள் புதிய புதிய யுக்திகளை கடைபிடிக்கின்றன. பூத் ஸ்லிப்பை வைத்தும் முறைகேடு செய்துவந்தன.

வாக்காளர் படம்
எப்படி என்றால், முன்பு வாக்காளர்களுக்கு 'பூத் ஸ்லிப்' எனப்படும் வாக்குச்சாவடி விவரச்சீட்டுகளை அரசியல் கட்சிகள் தான் வாக்காளர்களுக்கு வழங்கி வந்தன அந்த சீட்டில் கட்சியின் சின்னமும் இடம் பெற்றிருக்கும். கூடவே விவரச்சீட்டுகள் வழங்கும் போது வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் வழங்கி வந்தன. இந்த முறைகேடுகளை தவிர்க்க விவரச்சீட்டுகளை தேர்தல் ஆணையமே அரசு ஊழியர்கள் மூலமாக வழங்கி வந்தன.. அதில் வாக்காளரின் புகைப்படமும் இடம் பெற்று வந்தது. தேர்தலுக்கு முதல் 2 நாட்களில் பூத் ஸ்லீப்கள் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இதுவே நடைமுறையாக உள்ளது.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ' வாக்காளர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடி விவரச்சீட்டுகளுக்கு பதிலாக 'வாக்காளர் தகவல் சீட்டு' வழங்கப்படும். அதில் வாக்குச்சாவடி மையம், தேர்தல் நடைபெறும் நேரம், நாள் உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். ஆனால் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது. இந்த விவரச்சீட்டுகள் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இந்த விவரச்சீட்டை ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்க முடியாது' என்று தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை
வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், அரசு ஊழியர்களுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை உட்பட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கட்சிகள் எதிர்ப்பு
முறைகேடுகளை தவிர்க்கத்தான் வாக்காளரின் புகைப்படங்களுடன் வாக்குச்சாவடி விவரச்சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது புகைப்படம் இல்லாத விவரசீட்டுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது முறைகேடுக்கே வழிவகுக்கும் என்று புகார்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே 80 வயதை கடந்த முதியோர்கள், வாகன ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த புதிய அறிவிப்புக்கும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.


Click it and Unblock the Notifications
