முதல்வருக்கு ஜிஎஸ்டி குறித்து சவால் விட்ட சரத்குமார்.. ராதிகா வேட்புமனுவை வைத்தே.. திமுகவினர் பதிலடி
சென்னை: ஜிஎஸ்டி குறித்து நடிகர் சரத்குமார், முதல்வர் ஸ்டாலினுக்கு சவால்விட்ட நிலையில், திமுக ஆதரவாளர்கள் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் வைத்துள்ள வரி பாக்கி குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்கள்.. ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் சேர்ந்து 15 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார்கள்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வகையிலும், பாஜகவை விமர்சிக்கும் வகையிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜிஎஸ்டி குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.. அந்த பதிவில் அவர் கூறுகையில், "ஜிஎஸ்டி வரி அல்ல... வழிப்பறி! 'தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்' என்று முதல்வராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், 'ஜி.எஸ்.டி. பொருளாதாரச் சுதந்திரம்' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா? ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்-இல் உள்ள ஜிஎஸ்டி-யைப் பார்த்து புலம்புகின்றனர்!
அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா? 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா? ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது.
33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகியும் நடிகருமான சரத்குமார், தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி நடந்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது, ஒருவர் ஜெயிலில் இருக்கிறார். ஒருவர் பெயிலில் இருக்கின்றார். அதனை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.இப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று மக்களாகிய நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

ஜிஎஸ்டி பற்றியும் குடியுரிமை சட்டத்தைப் பற்றியும் பேசும் சகோதரர் ஸ்டாலின் பத்து நாள் டைம் எடுத்துக்கோங்க....எந்த பிரச்சனை பற்றி பேச வேண்டுமோ, இரண்டு பேரும் ஒரு தொலைக்காட்சியில் சந்தித்து பேசுவோம் - எது நியாயமானது? பொய்யை மக்கள் மனதில் பதிக்கிறார்கள்" என்று நடிகர் சரத்குமார் தென்காசியில் நடந்த பிரச்சாரத்தில் பேசினார்.
இதற்கு திமுகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.. இதுபற்றி திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவில், ராதிகா பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 6.54 கோடி ரூபாய், சரத்குமார் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 8.48 கோடி ரூபாய்.. இருவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 15 கோடி ரூபாய் ஆகும். இந்த தகவல் ராதிகா தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications