உளவுத்துறை கிட்ட கேளுங்க.. ஜெகன் மோகன் ஸ்டைலை எடுக்கும் எடப்பாடி? பாஜகவை மொத்தமாக உதறிவிட முடிவு?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பாஜக உடன் கூட்டணி உடைந்தது. பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று அதிமுக அறிவித்தது. அதன்பின் மறுநாளே அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுகவினர் பேச கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வந்தன.

இன்னொரு பக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த கூட்டணி குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் நேற்று மழுப்பலாக பேசினார். அவர் பேச்சில், அதிமுக- பாஜக இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கா ? இருக்கலாம்.. ஆனால், அதுவும் எனக்கு தெரியாது! கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜம்தான்.
இபிஎஸ்ஸை அடுத்த முதல்வராக்குவோம் என நான் கூற முடியாது. நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என் தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக தேசிய பாஜக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.
கூட்டணிக்கு குழப்பம்: இந்த கூட்டணி குழப்பத்திற்கு இடையில் தமிழ்நாடு அதிமுக தலைவர்கள் பலர் சிவி சண்முகம் தலைமையில் பாஜகவின் பியூஸ் கோயலை சந்தித்தனர். அதிமுக - பாஜக மோதல் தொடர்பாக ஆலோசனை செய்ய இந்த சந்திப்பு நடந்தது.
அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உடனும் இவர்கள் சந்திப்பு நடத்தினர். இந்த சந்திப்பில் பேசிய அதிமுக தலைவர்கள், பாஜக கூட்டணியில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அதிமுக கட்சியை அவர்கள் அவமதிப்பதை ஏற்க முடியாது . அண்ணாமலையை மாற்றும் படி நாங்கள் கூற முடியாது,
ஆனால் அண்ணாமலை இருக்கிறவரை கூட்டணியில் சிக்கல்தான். அவர் கூட்டணியை மதிப்பது இல்லை. அவரால் பாஜக அதிமுக கூட்டணிக்கு நல்லதா என்று நீங்களே பாருங்கள். அவரால் அதிமுகவை விடுங்கள் பாஜகவிற்கு நல்லதா என்பதை முதலில் பாருங்கள்.
பாஜகவிற்கு அவர் என்ன செய்கிறார் என்பதை உளவுத்துறை மூலம் நீங்களே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், என்று பொறிந்து தள்ளி இருக்கிறார்களாம். இந்த சந்திப்பிற்கு பின் வெள்ளி, சனிக்கிழமை இரண்டு நாட்களுமே அமித் ஷாவை சந்திக்க அதிமுக தலைவர்கள் நேரம் கேட்டனர். ஆனால் அதற்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
உச்சம்: அதிமுக - பாஜக கூட்டணி மோதல் உச்சத்தில் உள்ள நிலையில், கூட்டணி இல்லாமல் தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து இறுதிக் கோரிக்கையை எடுப்பதற்காக திங்கள்கிழமை மாலை மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்கிறார்கள். முக்கியமாக பாஜக, காங்கிரஸ் யாருடனமும் கூட்டணி வைக்காமல் நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி போல தனியாக களமிறங்கும் திட்டத்தில் எடப்பாடி இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications