தாடி வச்ச ஒருத்தன்.. என் கூட ஆம்ஸ்ட்ராங் பேசும் போதே வெட்டிட்டானுங்க.. நேரில் பார்த்தவர் பரபர தகவல்
சென்னை: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் 5 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள். இதனிடையே கொலை சம்பவம் நடக்கும் போது, சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அப்போது என்ன நடந்தது என்பது குறித்தும் ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) இன்று இரவு 7 மணியளவில் அவரது வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலினர் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. அரிவாளால் வெட்டியதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலையா.. ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிக்கிறது.. எடப்பாடி
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை போலீசார் 5 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.
சென்னை பெரம்பூர் மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் போலீசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், தன் கண் முன்னே ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்றும், அதற்கு முன்பு என்னிடம் தான் பேசிக்கொண்டு இருந்தாரு என்றும் அவரது ஆதரவாளர் கதறி அழுதபடி கூறினார்.
அவர் கூறியதாவது:- அங்க தான் நானும் இருந்தேன். வீட்டுக்கு ஆம்ஸ்ட்ராங் வந்தார். வீட்டு முன்னாடி தான் நின்றுகொண்டு இருந்தோம். என்னிடம் தான் பேசிக்கொண்டு இருந்தாரு. அப்போது ஒருத்தன் வந்தான். அவன் தாடி வச்சுருந்தான். இவன் மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லி சட்டைய பிடிச்சேன். அதுக்குள்ள அவரை கையில் வெட்டிட்டாங்க. பின்னாடி முதுகில் வெட்டிட்டாங்க.. பக்கத்தில் இருக்கிறவங்களை கத்தி கூப்பிட்டேன். ஆனால் அதற்குள் 10 பேர் வந்தானுங்க.. வெட்டிட்டாங்க.. என அழுதபடியே கூறினார்.


Click it and Unblock the Notifications
