தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை.. பட்ஜெட்டிற்கு பின் ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டின் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பட்ஜெட் நாளான இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தும் உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் காரணமாக வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்ந்தது. சென்னையில் காலையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலை 2வது முறையாகச் சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை:
இதன் மூலம் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,790க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் நாளே இந்தளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வரும் நாட்களிலாவது குறையுமா என்று மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டது.
ஆனந்த் சீனிவாசன்:
இதற்கிடையே பட்ஜெட் அறிவிப்புகள் காரணமாகத் தங்கம் விலை உயரவே செய்யும் எனப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை 20% வரை உயர்த்த போவதாகக் கூறியிருக்கிறார். நமது நாட்டின் நாமினல் ஜிடிபி வளர்ச்சியே 10% வரை தான் இருக்கிறது. அப்போது எப்படி வரி வருமானத்தை 20% வரை உயர்த்த முடியும்.
வரும் நாட்களில் எப்படியிருக்கும்:
மேலும், வருமான வரி விலக்கை வேறு உயர்த்தியுள்ளனர். அப்போது என்ன அர்த்தம் மறைமுக வரியை உயர்த்த போகிறார்கள். அது, இது என்று சொல்லிக் கூடுதலாக வரியை வசூலிக்கவே போகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க மாட்டார்கள்.. இப்படி எல்லாம் செய்யும் போது ரூபாயின் மதிப்பு மேலும் குறையவே செய்யும். இதனால் தங்கத்தின் விலை மேலும் மேலும் உயரும். இதனால் இந்திய பொருளாதாரத்திற்குக் கூட நன்மை இருக்கும் என நான் நினைக்கவில்லை" என்றார்.
அதாவது மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகளால் ரூபாய் மதிப்பு சரியும் என்றும் இது தங்கம் விலை அதிகரிக்கவே காரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஏற்கனவே 22 கேடரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,790க்கு போய்விட்ட நிலையில், வரும் காலத்தில் இது மேலும் மேலும் அதிகரிக்கும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.
பட்ஜெட் மீது சாடல்:
பட்ஜெட்டை மேலும் விமர்சித்துப் பேசிய ஆனந்த் சீனிவாசன், "இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்குக் கடன் அதிகம் தருவேன்.. அடுத்த 5 வருடத்தில் இதைச் செய்வேன்.. 10 வருடத்தில் அதைச் செய்வேன் என்று பேச்சு மட்டுமே இருக்கிறது.. அடுத்த 5 வருடத்தில் 10 ஆயிரம் மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பேன் என்கிறார். மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பது மாநில அரசு மற்றும் தனியார் செய்வது. அதற்கும் பெயரை இவர்கள் ஏன் வாங்குகிறார்கள்.
கிசான் கிரெட்டி கார்டு, சிறுகுறு நிறுவனங்களுக்கான கடன் ஆகியவற்றை கூட வங்கிகள் தான் தருகிறது. அது பொதுத்துறை வங்கிகள் தானே என நீங்கள் கேட்கலாம்.. பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் இப்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. எனவே, மக்கள் தான் அதை வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது வங்கிகள் கொடுப்பது குறித்து பட்ஜெட்டில் ஏன் பேச வேண்டும்.
எந்தவொரு அறிவிப்பும் இல்லை:
பஞ்சாபில் விவசாயி ஒருவர் 100 கிலோ தக்காளியை வெறும் ரூ.20க்கு விற்ற சம்பவம் நடந்தது.. இதுபோல விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு என்ன தீர்வை முன்வைக்கப் போகிறது என்பது குறித்த அறிவிப்புகள் இல்லை. அரசே காய்கறிகளை நியாயமான விலைக்கு வாங்கும் என அறிவித்து இருக்கலாம். அரசி, கோதுமைக்கு, சோளம், பருப்பு ஆகியவற்றுக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யலாம். அதையெல்லாம் மத்திய அரசு செய்வதாக பட்ஜெட் உரையில் சொல்லலாம். ஆனால், வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் இதில் சேர்த்துள்ளது எந்த விதத்தில் நியாயம்.
எளிய மக்களுக்கு எதுவுமே இல்லை:
மேலும், பட்ஜெட் என்பது அடுத்த ஓராண்டிற்கானது. ஓராண்டில் எவ்வளவு வரவு.. எவ்வளவு செலவு என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.. ஆனால், நீங்கள் பேசியது எல்லாம் அடுத்த 5 வருடம், 7 வருடம் என்றே இருக்கிறது. இந்த 80 நிமிட பட்ஜெட் உரையில் ரயில்வே என்ற வார்த்தை கூட இல்லை. நமது நாட்டில் தினசரி சராசரியாக 20 கோடி பேர் ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள். அதைப் பற்றிப் பேசவே இல்லை. அதேநேரம் 2 கோடி பேர் பயணிக்கும் விமானங்கள் குறித்துப் பேசுகிறார்கள். இந்த அரசு பணக்காரர்களுக்காக வேலை செய்வதையே இது காட்டுகிறது.
வந்தே பாரத் என 50+ ரயில்களை விட்டார்கள். அதில் ஒரு சில ரூட்களை தவிர பெரும்பாலான ரூட்களில் ரயில்கள் காலியாகவே ஓடுகிறது. வழக்கமான ரயில்கள், சரக்கு ரயில்கள் குறித்தே பேச்சே இருப்பதில்லை. கூடுதலாக எத்தனை கிமீ தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு கூட இல்லை.
உள்கட்டமைப்பிற்கு என்ன செய்வார்கள்:
நீங்கள் திரும்பத் திரும்ப மேல்தட்டு மக்களாகவே வேலை செய்கிறார்கள். சாதாரண மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. மின்சாரம், டெலிகாம், பேருந்து, சாலைகள், ரயில்வே என உள்கட்டமைப்பில் எது குறித்தும் பேசவே இல்லை. அப்போது உள்கட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாயை என்ன செய்யப் போகிறார்கள்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications