கிளாம்பாக்கம் வரை இல்லை.. நாளை முதல் சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. இனி ரொம்ப ஈஸி
சென்னை: நாளை முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்பட உள்ளது. சென்னை திரும்பும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் பொங்கல் பண்டிகை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கி வந்தன.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திய பின்னரே ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜனவரி 25ம் தேதி முதல கோயம்பேட்டில் இயக்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்னி பஸ்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இனி செல்லக்கூடாது எனவும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு அங்கேயே பஸ்களை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படியே நேற்று முதல் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் தற்போது தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு 77 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு நடைமேடைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதை தவிர 250 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் : நாளை முதல் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்பட உள்ளது. சென்னை திரும்பும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், நேற்று மாலை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அனுமதியற்ற முறையில் ஆம்னி பஸ்கள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடம் இருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது 'ஆம்னி பஸ் நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புத்தகங்கள் வைத்து பஸ் நிலையங்களில் இதுபோன்று முன்பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அவ்வாறு செய்யும் இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தனர். இதையடுத்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது போலீஸ் துறை மூலமாக குற்றவியல் மற்றும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் நாளை முதல் தாம்பரம் வரை(வரும் போது மட்டும்) இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எளிதாக ரயில் அல்லது வாகனங்கள் மூலம் தாங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications