Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு பதிலாக இவரை அமைச்சர் ஆக்குங்க.. முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட செந்தில் பாலாஜி? பரபர திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தனக்கு பதிலாக தனது தீவிர ஆதரவாளரை அமைச்சராக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்துள்ளதாக பரபர தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி 2023ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரது துறைகள் மற்ற அமைச்சர்கள் வசம் சென்றாலும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே நீடித்தார். ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Cabinet Reshuffle Likely in TN Senthil Balaji Recommends Loyalist for Minister Post

செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கெடு

செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த சில நாட்களில் மீண்டும் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்றார். அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் மற்றும் அமலாக்கத் துறையினர் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் காட்டமான கேள்விகளை எழுப்பியது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 28 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. சட்ட ஆலோசனை முடிவில், செந்தில் பாலாஜி பதவி விலகும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இறுதி முடிவெடுக்கவுள்ளதாகவும், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொன்முடி பதவிக்கும் சிக்கல்

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி அண்மையில் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன. அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சைத் தொடர்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. எனினும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனால் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகிய அமைச்சர்களுக்கு பதில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட போகிறார்களா அல்லது பிற அமைச்சர்களிடம் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது.

இலாகா மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருக்கும் மின்சாரத்துறை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு துறைக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துச்சாமி, வெள்ளக்கோவில் மு.பெ சாமிநாதன் ஆகிய இருவரில் ஒருவருக்கு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் இலாகாக்கள் வழங்கப்படக்கூடும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட அமைச்சராக தற்போது இருக்கும் பொன்முடி, அப்பதவியில் இருந்து அகற்றப்படும் நிலையில், அந்த மாவட்டத்துக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். அந்த அடிப்படையில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த செஞ்சி மஸ்தான், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன், விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் ஆகியோரில் ஒருவர் பொன்முடிக்கு பதிலாக அமைச்சராகக் கூடும் எனக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி ஐடியா

இதற்கிடையே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனக்கு பதிலாக தான் சொல்லும் ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவக்குறிச்சி இளங்கோவுக்கு வழங்குமாறு கோரி உள்ளதாக கரூர் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Cabinet Reshuffle Likely in TN Senthil Balaji Recommends Loyalist for Minister Post

அரவக்குறிச்சி இளங்கோ

அரவக்குறிச்சி இளங்கோ செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் இளங்கோ. அவரை அமைச்சராக்க வேண்டும் என செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையேயான மோதல்கள் வெளிப்படையாகத் தெரிந்ததே. ரஃபேல் வாட்ச் உள்பட பல விவகாரங்களில் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வார் என தொடர்ந்து கூறி வந்தார் அண்ணாமலை. அதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்தார் செந்தில்பாலாஜி.

தனக்குப் பதிலாக இளங்கோ

இந்நிலையில் தற்போது அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். தற்போது தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், தனது கை அமைச்சரவையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான இளங்கோவை அமைச்சர் ஆக்கினால், தான் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது சிக்கல் இருக்காது என செந்தில் பாலாஜி கருதுவதாக கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் வேண்டுகோளை முதல்வர் ஸ்டாலின் ஏற்பாரா? அரவக்குறிச்சி இளங்கோவை அமைச்சரவைக்குள் கொண்டு வருவாரா? அல்லது செந்தில் பாலாஜி கையில் இருக்கும் இலாகாக்களை மற்ற அமைச்சர்கள் வசம் ஒப்படைப்பாரா என்ற கேள்விகளுக்கெல்லாம் விரைவில் விடை கிடைத்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+