8 ஆயிரம் ரூபாய் தரமுடியுமா? நிதி எங்கே உள்ளது? இதனால் பாதிப்பு வருமா? - ஜெயரஞ்சன் டிகோட்
சென்னை: மாநில அரசின் நிதிநிலை எப்படி உள்ளது என்பது பற்றிய விளக்கத்தை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் 8,000 ரூபாய் வாக்காளர்களுக்கு டம்மி டோக்கன்களை வழங்குவதாகக் குற்றச்சாடுகள் தேர்தல் களத்தில் புதிய பூதமாகக் கிளம்பியது. அதற்குப் போட்டியாக சில தொகுதிகளில் அதிமுகவினர் 10,000 ரூபாய்க்கான டம்மி டோக்கன்களை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி தந்தபோது, அதைச் சாத்தியமில்லாத திட்டம் எனச் சொன்ன அதிமுக, இந்தத் தேர்தலில் 10,000 ரூபாயை இல்லத்தரசிகளுக்கு வழங்குவோம் என்று அதிரடியாக வாக்குறுதி அளித்திருக்கிறது.

பேருந்து பயணம் இலவசம், ஃபிரிட்ஜ் இலவசம், கேஸ் சிலிண்டர் இலவசம் என ஆஃபர் மேல் ஆஃபர்களை அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. இலவசத்தைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் எனப் பேசிவந்த தவெகவே இப்போது பல இலவசத் திட்டங்களை அளித்துள்ளது.
அரசின் நிலை நிலைமை என்ன?
இவ்வளவு இலவசத் திட்டங்களை ஒரு மாநில அரசினால் நிறைவேற்ற முடியுமா? அதற்கான வருவாய் எங்கே உள்ளது? எனப் பல சந்தேகங்கள் படித்த தலைமுறையினரிடம் எழுகின்றன. மாநிலத்தின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பவர்கள் இத்திட்டங்களை மிகக் கடுமையாக எதிர்க்கின்றன.
மற்றுமொரு பக்கம் 5 ஆண்டுகாலத்தில் ஒரு முறைதான் இந்த 8 ஆயிரம் அல்லது 10 ஆயிரத்தை வழங்க உள்ளனர்.
ஆண்டுக்கு 365 நாட்கள் எனில் 5 ஆண்டுக்கு 1,825 நாட்கள். அப்படி எனில் ஒருநாளைக்கு சுமார் 4.05 ரூபாய் ஆகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 4 பேர் என வைத்துக் கணக்கிட்டால், அது செலவு செய்யும் தொகை ஒரு செலவே இல்லை எனச் சிலர் வாதிட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் உள்ள புள்ளி விவரங்கள் அச்சம் தருவதாக உள்ளன.
2026-27 ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையின்படி மாநிலத்தின் கடன் சுமை 10.7 லட்சம் கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் வருவாய் பற்றாக்குறை என்பதைப் பார்த்தால் 49 ஆயிரம் கோடி அன்றாட செலவினங்களுக்கே தட்டுப்பாடாக நிலவுவதாக ஒரு கணக்கு முன்வைக்கப்படுகிறது.
திமுக ஒரு குடும்ப அட்டைக்கு 8 ஆயிரம் வழங்குவதாகக் கூறுகிறது. அதாவது 2.2 கோடி குடும்ப அட்டைகள் என வைத்துக் கொண்டால், இதற்காக சுமார் 12 ஆயிரம் கோடி முதல் 15,000 கோடி வரை நிதி செலவாகும். அதிமுக 10,000 எனக் கூறியுள்ள கணக்குப் படி பார்த்தால், 22 கோடி நிதி தேவைப்படும்.
இது ஒன்று சாத்தியமில்லாத நிதி அல்ல. மாநில அரசினால் செலவழிக்க முடிகின்ற தொகைதான். ஆனால், முன்னதாக பேருந்து இலவசம், கல்லூரி மாணவிகளுக்குப் படிப்புக்காக இலவசம், லேப் டாப் இலவசம், காலை உணவு இலவசம், மகளிர் உரிமைத் தொகை இலவசம் எனப் பல திட்டங்களுக்கு நிதிகள் செலவாகி வருகிறது.
இன்னும் மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர உள்ளது, கல்லூரி மாணவர்களுக்கும் நிதி உதவி என வாக்குறுதி தரப்பட்டுள்ளது. ஆகவே இந்த நிதிச் சுமையோடு கூடுதலாக ஒரு சுமார் 15 ஆயிரம் கோடிக்கு மேல் தேவையாகிறது. அதைச் சமாளிக்க முடியுமா? என்பதே பெரிய கேள்வியாகும். அது மட்டுமல்லாமல் இந்தத் திட்டங்கள் முடிவானதல்ல. வரும் காலங்களில் மேலும் சில இலவசத் திட்டங்கள் அதிகரிக்கக் கூடும். அப்படிப் பார்த்தால், அரசு பல இடங்களில் நிதியைக் குறைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.
10 அல்லது 8 ஆயிரம் தரமுடியுமா?
உதாரணமாக நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். குறிப்பாகச் சொன்னால், க்ளைமேட் சேஞ்ச், வன உயிர் பாதுகாப்பு, பருவகால மாற்றங்களால் ஏற்படக் கூடிய எதிர்பாராத பேரிடர் எனப் பலவற்றுக்கும் நிதியை ஒதுக்க முடியாமல் போகலாம்.
அடுத்தாக தரமான சாலை, குடிநீர், உள்கட்டமைப்பை நவீனமாக்குதல் எனப் பல திட்டங்களுக்கு நிதியை அரசு குறைக்கவேண்டி வரும் என்கிறார்கள்.
அதே சமயம் இந்த 8 ஆயிரமோ, 10 ஆயிரமோ சாத்தியமில்லாத திட்டமில்லை என்றும் சொல்கிறார்கள். இதற்கு அரசு எங்கிருந்து நிதியைப் பெறமுடியும் என்று கேட்டால், வரி வருவாயைப் பெருக்கி திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அது எந்த மாதிரியான வரி உயர்வு என அவர் தெளிவுபடுத்தவில்லை. வரி என்பது வீட்டு வரி, தண்ணீர் வரி மட்டுமே அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மாநிலத்திற்கான வருவாய் 38% உற்பத்தியிலிருந்துதான் வருகிறது என்கிறார் ஜெயரஞ்சன்.
மாநிலத்தின் நிதி ஆலோசனைக்காக உலகளாவிய 5 பொருளாதார வல்லுநர்களை ஸ்டாலின் அரசு நியமித்தது. அந்தக் குழு இத்திட்டங்கள் பற்றி என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. அதேசமயம், 1000 ரூபாய் திட்டத்தை நிறைவேற்றிக் காட்டியதன் மூலம், திமுக அரசு வரும் காலங்களில் இந்த 8 ஆயிரம் திட்டத்திற்கும் ஒரு படிப்பினையைக் கற்று இருக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
அரசின் நிதிநிலை எப்படி உள்ளது? வெள்ளை அறிக்கை கிடைக்குமா? எனக் கேட்டால், திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், "தனியே ஒரு வெள்ளை அறிக்கைத் தேவையில்லை. அரசு ஒவ்வொரு துறைக்கும் செலவினங்களுக்காக நிதி ஒதுக்கி உள்ளதை வைத்தே அதைக் கணக்கிட முடியும். அரசின் நிதிநிலை நன்றாகவே உள்ளது. ஒரு மாநில அரசின் மீது மத்திய அரசு உள்ளது. அது ஒரு சட்டத்தை வகுத்துள்ளது. அதன் வரம்பை மீறி ஒரு மாநில அரசு தன் இஷ்டம் போல் கடன் வாங்க முடியாது. வருவாயைக் கொண்டே கடன் பெற முடியும். எனவே 8 ஆயிரம் திட்டத்தைச் செயல்படுத்த முடியும்" என்கிறார் அவர்.
-கடற்கரய்












Click it and Unblock the Notifications