"சம்மட்டி அடி"..பணியும் எடப்பாடி பழனிசாமி? அன்வர்ராஜா அப்பவே சொன்னாரே..திமுகவுக்கு அதிமுக "சான்ஸ்"?
சென்னை: விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. இதில், சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன.
"அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான ஆட்சியை தந்துள்ளது. கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு, அதிமுக கொள்கைக்கு உடன்படாத சிலவற்றை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்ததால் சிஏஏவை ஆதரித்தோம்" என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எடப்பாடியின் இந்த பேச்சுதான், அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது...
சிஏஏ: அன்று முதன்முதலில் இந்த சிஏஏ விவகாரம் தலைதூக்கியபோது, அசாம் மாநிலத்தில் மட்டுமே தேசிய மக்கள் குடியுரிமை பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றதுமே மக்களிடம் அதிருப்தியும், அதிர்ச்சியும் கிளம்பியது.

பொது சிவில் சட்டம் தொடர்பாக, ஆரம்பத்தில் எந்த பதிலையும் அதிமுக சொல்லவில்லை.. பெருத்த அமைதி காத்தது.. இன்னும் சொல்லப்போனால், கடந்த தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது, அதை எந்த வடிவிலும் நிறைவேற்றக்கூடாது என்று கூறியிருந்தது..
வாக்குகள்: ஆனால், திடீரென ஆதரித்து வாக்களித்துவிட்டது.. அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 பேர் வாக்களித்திருந்தனர்.. அதிமுகவின் இந்த முடிவுதான் இஸ்லாமியர்களிடையே அதிருப்தியை தந்துவிட்டதாக கணிக்கப்பட்டது.
இதைத்தான் அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா அப்போதே கூறியிருந்தார்.. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. அதனால், மத்திய அரசின் இந்த சட்டத்தை, அதிமுக எதிர்த்தால், நடந்து வரும் போராட்ட எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில், அதிமுக நீங்காத இடத்தை பெறும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
பரிசீலனை: ஆனால், அன்வர் ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பேச்சை, அதிமுக மேலிடம் பரிசீலிக்கவில்லை என்றே தெரிகிறது.. அத்துடன், நாடாளுமன்றத்திலேயே அதிமுக ஆதரவு தந்திருந்ததுடன், சட்டமன்றத்திலும், இதுகுறித்து பேசிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு இஸ்லாமியராவது இங்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்..
எடப்பாடியின் இந்த வீடியோவையும், நேற்று எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியையும், திமுக தரப்பில் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், முதல்வர் ஸ்டாலினும், இதுகுறித்து உடனடியாகவே கேள்வி எழுப்பியிருந்தார்.
சிறைவாசிகள்: "குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை கண்மூடித்தனமாக ஆதரித்த அதிமுக இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள்மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று, இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும். உண்மையில் அக்கறை இருக்குமானால், ஆளுநரைச் சந்தித்து அழுத்தம் தர அதிமுகவினர் தயாராக இருக்கிறார்களா?" என்று கேட்டு ஸ்டாலின் "செக்" வைத்துள்ளார்.
பெண்களின் வாக்குகள், எந்த அளவுக்கு அதிமுகவுக்கு அதிகம் இருக்கிறதோ, அதேபோல இஸ்லாமிய வாக்குகளும் திமுகவுக்கு கணிசமாகவே இருந்து வருகிறது. இந்த சிறுபான்மையினர் வாக்குகளை யார் அள்ள போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இன்று எழுந்துள்ளது.
அதிமுக + திமுக: இதனிடையே, எடப்பாடி பழனிசாமி, தற்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது குறித்து, அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
"அதிமுகவுக்கு இஸ்லாமியர்களிடம் அன்று ஏற்பட்ட சரிவுதான், இன்றுவரை நீடித்தும் வருகிறது.. சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தலின்போதுகூட, பாஜக தலைவர்களை அருகில் சேர்க்காமலேயே பிரச்சாரத்தை அதிமுக செய்திருந்ததையும் கவனிக்க வேண்டி உள்ளது.
காவிரி விவகாரம்: சிஏஏ என்றில்லாமல், வேளாண் சட்டமாகட்டும், காவிரி விவகாரட்டும், நீட் தேர்வு, 8 வழிச்சாலை போன்றவற்றிலும் அதிமுகவின் நிலைப்பாட்டை இந்த தமிழகமே கண்டது.. கொள்கை வேறு கூட்டணி வேறு என்று இவர்கள்தானே சொல்கிறார்கள்? அப்படியானால், பாஜக கொண்டுவந்த திட்டத்திற்கெல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து ஆதரவு தந்ததை தவறு என்று ஒப்புக் கொள்கிறார்களா? இப்போது நெய்வேலி விவகாரத்தில் அதிமுக நிலைப்பாடு திடீரென மாற்றிக்கொள்ள என்ன காரணம்?
அதிமுக வேண்டுமானால், கூட்டணி காரணத்தை சொல்லி தங்களுடைய நிலைப்பாட்டை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளலாம்.. ஆனால், இந்த மாற்றத்தை இஸ்லாமியர்கள் ஏற்பார்களா? அதுவும் உடனடியாக ஏற்றுக்கொள்வார்களா? என தெரியவில்லை.. அப்படியே ஏற்றாலும், அவையெல்லாம் அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளாக மாறுமா? என்பது தெரியவில்லை.
யாருக்கு ஓட்டு: இஸ்லாமிய மக்களில் அதிமுகவுக்கு, தீவிர எம்ஜிஆர் விசுவாசிகள் ஓட்டுப்போட்டு வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.. ஆனால், அன்று, ராஜ்யசபாவில் அதிமுக சிஏஏ சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டம் தோல்வி அப்போதே அடைந்திருக்கும் என்பது மட்டும் உறுதி" என்றனர்.












Click it and Unblock the Notifications