"மீன் நழுவுதே".. திடீர்னு டிடிவி தினகரன் எடுத்த முடிவு.. அதிரும் எடப்பாடி, பாஜக.. அப்ப திமுக கூட்டணி?
சென்னை: 2 விதமான ரூட்களை கையில் எடுத்துள்ளார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.. இதனால், அதிமுக, பாஜக கட்சிகள் குழம்பி போயுள்ளதாக சொல்கிறார்கள்.சமீபத்தில் பிரதமர் மோடி, அதிமுக எம்பி தம்பிதுரையிடம் சில விஷயங்கள் பேசியிருக்கிறார்.. அப்போது, "அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன் இருந்தால் தான் தென்மாவட்ட முக்குலத்தோர் சமூக ஆதரவு அதிமுகவுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் எனக்கு வருகிறது.. ஆனால், அதை உங்க தலைவர் (எடப்பாடி பழனிசாமி) ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்? என்று கேட்டாராம்.
விளக்கம்: அதற்கு தம்பிதுரை, " முக்குலத்தோர் சமூகம் அவங்க பின்னாலதான் இருக்கு, ஓபிஎஸ்ஸும் தினகரனும் சொன்னால்தான் அந்த சமூகம் கேட்கும்ங்கிறதெல்லாம் ஒருவித மாயை. தேனியில் ஓபிஎஸ்சுக்கும், தஞ்சை-திருவாரூர் மாவட்டத்துல தினகரனுக்கும் வேண்டுமானால் அவங்க பேச்சை கேட்பாங்க. ஆனால், அதே சமூகத்துல செல்வாக்காக இருக்கிற தலைவர்கள் அதிமுகவில் இருக்காங்க. அதனால, முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு நிறையவே இருக்கு" என்றாராம்.

அமமுகவுக்கு பெருத்த செல்வாக்கு இல்லை என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்தியதாக தெரிகிறது. அதேபோல, எடப்பாடி பழனிசாமியோ, அதிமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடியிலிருந்து, கிட்டத்தட்ட 2 கோடியே, 44 லட்சமாக உயர்ந்துவிட்டது என்கிறார். ஆனால், அதிமுக தரப்பில் இப்படி கருத்துக்கள் முன்வைக்கும்போது, அமமுக சும்மா இருக்குமா என்ன?
அமமுக: டிடிவி தினகரன் இதுகுறித்து சொல்லும்போது, பெரம்பலூரில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் அதிமுகவுக்கு மொத்தமே 10 சதவீதம் வாக்கு உள்ளது.. சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காற்காடு, தென் ஆற்காடு, தருமபுரி, சேலம் போன்ற இடங்களிலம் 10 சதவீத வாக்குகள் உள்ளன..
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு தொகுதிகளில் 15 சதவீதம் மட்டுமே உள்ளன.. பாமக இல்லாமல் வட தமிழகத்தில் அதிமுகவால் வாக்கு பெற முடியாது. எடப்பாடி தொகுதியிலேயே பாமக ஆதரவால் தான் பழனிசாமி வெற்றி பெற்றார்" என்றார்.
சரியும் கோட்டை: கொங்கு மண்டலத்திலேயே அதிமுக மண்ணை கவ்வி வருகிறது என்பதே அமமுகவின் கூற்றாகும்.. அதனால்தான், அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்த, பாமகவுடன் கூட்டணி வைக்க அமமுக முயன்று வருவதாகவும், இதற்கான அஸ்திவாரத்தை ஓபிஎஸ் போட்டு வருவதாகவும் சலசலக்கப்படுகிறது.
அமமுக + அதிமுக இரு தரப்பிலுமே, வாக்கு வங்கிகள் குறைந்துவிட்டதாக மாறி மாறி விமர்சித்து கொள்ளும் நிலையில், உண்மையிலேயே களநிலவரம் எப்படி என்று தெரியவில்லை. டிடிவி தினகரனை பொறுத்தவரை, கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள் பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது.
முக்குலத்தோர்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதனாலேயே டிடிவி தினகரனை தங்களுடன் அணி சேர்க்க முயல்வதாக தெரிகிறது. எனினும் இப்போதுவரை, அமமுகவுக்கான முக்கியத்துவத்தை பாஜக தராமலேயே உள்ளது.
ஒருவேளை எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கு தொடர்ந்தால், தினகரன் + ஓபிஎஸ்ஸை பாஜக கண்டுகொள்ளாமல் விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். அதனால்தான், பாமகவுடன் கூட்டணி வைக்க அமமுக, ஓபிஎஸ் டீம் முயற்சிக்கிறதாம்.
முக்கிய அறிவிப்பு: அதுமட்டுமல்ல, தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. மக்களவை தேர்தலில் பிரதமரை முன்னிலைப்படுத்தும் அணியுடன் நாங்கள் கூட்டணி அமைப்போம், இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என்றும் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.
தினகரனின் இந்த அறிவிப்புக்கு இன்னொரு காரணமும் உள்ளது.. கடந்த முறையே காங்கிரஸ் கட்சியுடன் அமமுக கூட்டணி வைக்க முயன்றது.. ஆனால், திமுகவுடன் ஐக்கியமாகிவிட்டதால், அந்த முயற்சி ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. இப்போது, ஆளும் கட்சியுடன் சில அதிருப்திகள் காங்கிரசுக்கு உள்ளதாகவே தெரிகிறது. சீட் ஒதுக்கீடுகளிலும் திமுக குறைந்த அளவு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
2 ஆப்ஷன்கள்: இதைத்தான் தினகரன் இப்போது சுட்டிக்காட்டி உள்ளார்.. "திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும் கடைசி நேரத்தில் அக்கட்சி கழற்றி விடப்படலாம். அப்போது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமானால் அதில் அமமுக இடம்பெறும்" என்று இன்னொரு ஆப்ஷனையும் தெரிவித்துள்ளார்.
ஆக, காங்கிரஸ் அல்லது பாஜக என ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் அமமுக கூட்டணி வைத்து, பாமகவையும் தன்னுடன் இணைத்து செல்லும் என்கிறார்கள். அதனால்தான், "தனித்து போட்டி" என்ற வார்த்தையை தினகரன் அழுத்தமாக உச்சரிக்க தொடங்கி உள்ளாராம்.
ஆனால், இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. காரணம், இரட்டை இலையை வைத்திருக்கும் எடப்பாடியையும் லேசில் எடைபோட்டுவிட முடியாது என்பதை பாஜக நன்றாகவே உணர்ந்துள்ளது.. அதனால்தான், அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுடனான கூட்டணியை இன்னும் முடிவு செய்யாமல் உள்ளதாக சொல்கிறார்கள்.
எப்படி பார்த்தாலும், நடக்க போகும் தேர்தல் கூட்டணியில், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளை வைத்தே, அடுத்தடுத்த பரபரப்புகள் அரசியல் களத்தில் எதிரொலிக்கும் என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications