திரும்ப திரும் "நழுவ விடும்" எடப்பாடி பழனிசாமி? அன்புமணிக்கு வந்த ஆசை?.. பாஜக நச்னு போட்ட நங்கூரம்
சென்னை: திமுக கூட்டணிக்கு இணையான கூட்டணியை அதிமுக இன்னும் உருவாக்கவில்லை.. தற்சமயம் பலவீனமான கூட்டணி உள்ள நிலையில், பாமகவையும் கூட்டணிக்கு உள்ளே அதிமுக கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஆனால், அதிமுகவில் இன்னும் வலுவான கூட்டணி அமையவில்லை.. பாமக, தேமுதிக கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த வாரமே பாமக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகிவிடும் என்கிறார்கள்.. வடமாவட்டங்களில் வலுவான செல்வாக்கை வைத்துள்ள பாமகவின் கோரிக்கைகளை அதிமுக தரப்பில் ஏற்கவில்லை என்று செய்திகள் கசிந்தவாறே உள்ளன..
தேமுதிகவைவிட பாமகவின் வாக்கு வங்கி அதிகமானவை என்பதால், பாமக கேட்கும் தொகுதிகளை அதிமுக விட்டுத்தந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது..

அதிமுக - பாமக: காரணம், திமுகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமானால், பாமக போன்ற பலம்வாய்ந்த கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம், இன்று அதிமுகவுக்கு எழுந்துள்ளது. பாஜகவும் இதை மையப்படுத்தியே பாமகவுக்கு வலையை வீச ஆரம்பித்தது.
எனவேதான் கடந்த முறை போலவே, 7 + 1 சீட்களை தருவதாக சொல்லி, கூட்டணிக்குள் அதிமுக கொண்டுவர முயற்சித்ததாக தெரிகிறது. அந்தவகையில், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி என 7 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி பாமக தரப்பிலும் லிஸ்ட்டும் தந்ததாகவும், ஆனால், பாமக தந்த லிஸ்ட்டில் உள்ள பெரும்பாலான தொகுதிகளைதான் தேமுதிகவும் கேட்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி என்றும் தகவல்கள் கசிந்தன.
அன்புமணி ராமதாஸ்: இப்போது திடீரென பாஜகவுடன் பேச்சுவார்த்தையை பாமக தரப்பில் தொடங்க போவதாக செய்திகள் கசிய துவங்கி உள்ளன.. எனவே, இன்றைய தினம் அன்புமணி ராமதாஸ் டெல்லியில் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கேற்றவாறு, பாஜக கூட்டணியில் கூடுதல் இடங்களை ஒதுக்க இருப்பதால் பாமக, பாஜகவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதுவரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வெளிப்படையாக பாமக சொல்லவேயில்லை.. அப்படியிருக்கும்போது, திடீரென பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்ற செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கூட்டணி: தன்னுடைய நிர்வாகிகளிடம் அன்புமணி சொன்னபோது, டெல்லிக்கு வருமாறு அவசர அழைப்பு உள்ளதால், அங்கு என்ன சொல்லப்படுகிறது என்பதை பார்ப்போம்.. அதற்கு பிறகு முடிவு செய்வோம் என்று சொல்லியிருக்கிறாராம். அந்தவகையில், இன்றைய தினம் டெல்லி மேலிடத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையை பாமக ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.
பாமகவின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கேட்கும் பாமகவிற்கு, வடமாவட்டங்களில் கேட்கும் இடங்களை அதிமுக ஒதுக்க முன்வரவில்லையாம். அதனால்தான், பாமக நிலைபாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
அமைச்சரவை: இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. அதாவது, தற்சமயம் இந்தியா கூட்டணி வலுவாக உள்ள நிலையில், அதிமுகவுடன் கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்று தெரியவில்லையாம். ஒருவேளை பாமகவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், தன்னுடைய ராஜ்ய சபா எம்.பி பதவியை வைத்து அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கணக்கு போடுகிறாராம் அன்புமணி..
ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும், அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தானாம்.. காரணம், ஏற்கனவே, பாஜக கூட்டணியில் இருந்தும், எம்.பி. பதவி தரப்பட்டும்கூட, அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது, இப்போது மீண்டும் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று பாமக தரப்பிலேயே சலசலக்கப்படுகிறதாம்.
இளைஞர்கள்: அதுமட்டுமல்ல, பாமகவின் இளைஞர்களை, பாஜக இழுத்துக் கொள்கிறது என்ற வருத்தம் ஐயாவுக்கு இருக்கிறதாம். அதனால்தான், அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று எண்ணுகிறாராம். எனினும், வடமாவட்டத்தில் சில இடங்களை ஒதுக்க அதிமுக தரப்பு முன்வராததால், திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிமுக - பாமக இடையே இழுபறி நீடிக்கவும், இந்த சந்தர்ப்பத்தை கரெக்ட்டாக பயன்படுத்தி, பாஜக என்ட்ரி தந்துள்ளது. பாமக தரப்பில் பேசி, தொகுதிகளை ஒதுக்குவதாகவும் சொல்லியிருப்பதாக தெரிகிறது. அதனால்தான், ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி பார்ப்போம் என்ற முடிவுக்கு அன்புமணி தரப்பு வந்துள்ளதாம். ஒருவேளை பாமகவின் கோரிக்கைகளுக்கு பாஜக ஓகே சொல்லிவிட்டால், அதிமுகவின் நிலைமை என்னாகும் என்று தெரியவில்லை.
கிளைமேக்ஸ்: ஒன்றிரண்டு தொகுதிகளை பார்த்து, மொத்தமாகவே, பாமகவை பாஜகவிடம் இழக்க போகிறதா? அல்லது கடைசி நேரத்தில் முயற்சி எடுத்து, தன்னுடைய கூட்டணிக்குள் பாமகவை அழைத்து கொள்ள போகிறதா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications