ஸ்டாலினிடம் "நெருங்கிய" அன்புமணி.. பின்னாடியே "அவர்".. எடப்பாடியை முந்திய திமுக.. முறிகிறதா கூட்டணி?
சென்னை: எம்பி தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்தவகையில் திமுகவும் தன்னுடைய கூட்டணி மீதான கவனத்தை குவித்து வருகிறது.
நேற்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகம் வந்திருந்தார் பாமக தலைவர் அன்புமணி.. முதல்வர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்தார்..

திடீர் சந்திப்பு: அப்போது, பாமக சட்டசபை குழுத்தலைவர் ஜிகே மணி, இணைப்பொதுச்செயலர் ஏகே மூர்த்தி, செய்தி தொடர்பாளர் பாலு உடனிருந்தனர்.. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது. அப்போது, அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின், பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, வன்னியர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்காக முதல்வரை சந்தித்தாக கூறினார். ஆனாலும், இந்த சந்திப்பின் பின்னணியில் பல அரசியல் கணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
யாருடன் கூட்டணி: கடந்த ஒருவருட காலமாகவே, பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற அலசல்கள் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கின்றன.. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், "நீங்க என்னை எப்படி கேள்வி கேட்டாலும், என் பதில் ஒன்னுதான்.. தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி முடிவு செய்வோம்" என்று கறாராக கூறிவந்தார் அன்புமணி ராமதாஸ்.
அதேசமயம், திமுகவுடன் கூட்டணி என்ற சலசலப்பு எழுந்தது.. ஆனால், நெய்வேலி பிரச்சனையை பாமக கையில் எடுக்கவும் அந்த கணிப்பும் முறிந்துவிட்டது. அப்படியானால் அதிமுகவுடன் கூட்டணியா? என்ற சலசலப்பு எழுந்தது.. எடப்பாடியையும் சேர்த்தே பாமக விமர்சித்தால், அந்த கணிப்பும் முறிந்துவிட்டது. அதற்கேற்றவாறு, பாமக குறித்த பேச்சை எடப்பாடி தரப்பு எடுக்காமலேயே இருந்தது.
அதுமட்டுமல்ல, பாமக இல்லாமலேயே வன்னியர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியும் என்றும், திருமாவளவன் கூட்டணியில் இருப்பதால், வன்னியர் ஆதரவை திமுகவால் பெற முடியாது என்றும் எடப்பாடி தரப்பு பலமாக நம்புவதாகவும் தகவல்கள் கசிந்தன.
யூகங்கள்: ஆனால், பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்டபிறகு, இந்த அனைத்து யூகங்களுமே டமார் என நொறுங்கிவிட்டன.. இப்போது, கூட்டணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கும், கூட்டணியை தக்கவேண்டிய கட்டாயம் திமுகவுக்கும் ஏற்பட்டுள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைக்க போவதாக தகவல்கள் கசிந்தபோதே, விசிக அலர்ட் ஆகிவிட்டது.. இப்போது விசிகவுடன் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.. லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதி ஒதுக்காவிட்டால், மாற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் சொல்லிவிட்டார்..
மாறுது கணக்குகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், அன்புமணியை, அவரது பிறந்த நாளில் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.. எதற்கும் திமுக தயாராக இருப்பதை, கூட்டணி கட்சிகளுக்கு சொல்வதற்காகவே, இந்த சந்திப்பு நடந்துள்ளதாக சொல்கிறார்கள்..
விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை தங்களது முடிவுகளை மாற்றினால், திமுகவும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என்று தெரிகிறது.. டைம் நெருங்கிவருவதால், கட்சிகளின் கூட்டணி கணக்குகள் விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications