ராஜ்நாத் விழாவுக்குப் போகலாம்..விஜய் விழாவுக்குப் போகக்கூடாதா? திருமா மீது பாய்ந்த மணி
சென்னை: அம்பேத்கர் பற்றிய நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்துள்ள நிலையில், அது பற்றி மூத்த பத்திரிகையாளர் மணி பல விசயங்களை உடைத்துப் பேசி இருக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியவுடன் அதிகமாக அவரை வரவேற்றுப் பேசியவர் விசிக தலைவர் திருமாவளவன். ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய் வரும் 2026 தேர்தலில் 10% வாக்குகளைப் பெறுவார் எனக் கணித்து கருத்துச் சொன்னவரும் அவர்தான். அதன் பின்பு விக்கிரவாண்டி மாநாடு நடைபெறும் வரை திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளை ஒரு மென்மையான போக்கில் வரவேற்றுக்கொண்டுதான் இருந்தார். அதேபோல் அதிகாரத்தில் பங்கு என விஜய் மாநாட்டில் அறிவித்தவுடன் ஊடகங்களின் முழுக் கவனத்தையும் திருமாவளவன் பெற்றார். அதன்பின்னர் அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டு பழியை ஊடகங்கள் மீதே தூக்கிப் போட்டார்.

இந்நிலையில்தான் சில நாட்கள் முன்பே ஒரு வார இதழ் வெளியிடும் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை விஜய் வெளியிட இருப்பதாகவும் அதை திருமாவளவன் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தவெக மாநாட்டில் விஜய் தங்களின் நேரடி எதிரி திமுகதான் என்று அறிவித்த பிறகு திருமாவளவன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளார். அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாதது குறித்து சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் பற்றிப் பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "விசிகவுக்கும் திமுகவுக்கு இரண்டு சுற்று மோதல்கள் நடைபெற்றன. அதில் இரண்டாவது முறையாக திமுக வெற்றிபெற்றுவிட்டது. தோழமைக்குள் நடக்கும் யுத்தம் என்று விசிக சொல்லிக் கொள்ளலாம். நிழல் யுத்தம் என மற்றவர்கள் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் திமுகதான் ஜெயிக்கிறது. திருமா ஒவ்வொருமுறையும் நாக் அவுட் ஆகிக்கொண்டே வருகிறார். முதலில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்தார். அவர் வந்ததும் நடந்த அறிவாலய சந்திப்புக்குப் பின் திருமா, மாநாட்டில் திமுகவும் கலந்துகொள்ளும் என்றார். அதுவே விசிகவுக்கு மிகப்பெரிய அடி. மது ஒழிப்பு மாநாட்டில் ஆளும் கட்சியையே கலந்து கொள்ள வைத்தது ஒரு அவலமான அரசியல் நிலைப்பாடு.

அப்போதே திமுகவின் அரசியல் அனுபவத்திற்கு முன்பாக திருமா தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது முதல் ரவுண்டிலேயே தெரிந்தது. இப்போது இரண்டாவது ரவுண்ட் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா. ஒரு ஆண்டுக்கு முன்பே திட்டமிட்ட நிகழ்ச்சி இது. முதலில் முதல்வர் ஸ்டாலினை வெளியீட்டு விழாவுக்கு அழைக்கத் திட்டமிட்டனர். ஆனால், ஸ்டாலின் அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை. அடுத்து விஜய்யிடம் சென்றார்கள். அதில் திருமாவளவனுடன் விஜய் கலந்து கொள்வதாக இருந்தது. அதை இப்போது திருமா தவிர்த்து இருக்கிறார்.
இது பற்றி திருமா விளக்கம் அளிக்கும்போது, 'விஜய் கலந்துகொள்வதாக முடிவு செய்வதற்கு முன்பாக நான் கலந்து கொண்டேன். விஜய் திமுகதான் எதிரி எனச் சொன்ன பிறகு நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிட்டது' என்ற தொனியில் பேசி இருந்தார். விசிக ஒரு தனிக் கட்சி. அவர் தனி சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். அவர் கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். 2 எம்பி இருக்கிறார்கள். தனி அடையாளம் உள்ள ஒரு கட்சியாக இருந்தும் அவர் அம்பேத்கர் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மறுத்துள்ளார். எந்தளவுக்கு அவர் திமுகவுக்குள் கட்டுண்டு கிடக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த விழாவில் பங்கேற்பது திமுகவுக்கு நெருடலாக இருக்கும் என திருமா கருதுகிறார். நான் கேட்கிறேன்.

நரேந்திர மோடிக்கும் ராஜ்நாத்சிங்கிற்கும் சித்தாந்த ரீதியாக என்ன வித்தியாசம்? இருவரும் ஆர்.எஸ்.எஸின் புத்திரர்கள். அவரை அழைத்து வந்து கருணாநிதியின் நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது திமுக. கருணாநிதியின் சமாதியைச் சுற்றிச் சுற்றிக் காட்டினார்கள். 60களில் தொடங்கிய எந்தக் கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை என அவர் பேசியதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டீர்கள். கருணாநிதியின் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி ஜனாதிபதியிடம் மனு கொடுத்தார் ராஜ்நாத் சிங்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நேரடி வாரிசு எனத் தன்னை சொல்லிக் கொள்ளும் ராஜ்நாத்சிங்கை வைத்து ஒரு விழா நடத்தி, அதில் தோழமைக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் எனப் பல கட்சிகள் கலந்து கொண்டன. ஆனால், பெரியார்தான் என் வழிகாட்டி என வெளிப்படையாக அறிவித்துள்ள, ஒத்த சிந்தனை கொண்ட விஜய் பங்கேற்கும் விழாவில் திருமா பங்கேற்காமல் புறக்கணிக்கிறார் என்பது எப்படிச் சரியாகும்?
விஜய் கட்சி ஆரம்பித்த போது ஆதரித்தவர்களில் முதன்மையானவர் திருமா. அடுத்து பெரியார் திடலுக்கு விஜய் போன போது வாழ்த்தியவர் திருமா. விஜய் மாநாட்டுக்கு வாழ்த்து சொன்னவரும் இவரேதான். விஜய் மாநாட்டில் திமுகவை எதிர்த்ததும் உடனே மாற்றி பேசுகிறார் திருமா. விஜய் பாஜக ஆதரவாளர் இல்லை. அவர் திமுகவையும் பாஜகவையும் சம அளவில் எதிர்க்கிறார். அவர் கலந்து கொள்ளும் அம்பேத்கர் விழா இது. அதில் பங்கேற்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சினை? விஜய்க்குப் பல விசயங்களில் தெளிவான பார்வை இல்லை என்பதை ஏற்கிறேன். விஜய்க்கு சாம்சங் தொழிலாளர் பிரச்சினை, தமிழ்த் தாய் வாழ்த்து, விஸ்வகர்மா பிரச்சினை எனப் பலவற்றில் நிலைப்பாடு எடுக்க முடியாமல் மவுனமாக இருக்கிறார்.
ஆனால், அவர் பாஜக எதிர்ப்பு என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அவருடன் மேடை ஏறுவதால் விசிகவின் பலம் கூடும். அதை அறிந்தும் திமுகவுக்கு அஞ்சிப் போய் திருமா பங்கேற்காமல் பின் வாங்கி இருக்கிறார். இது அவரது தனித் தன்மையைக் கெடுக்கும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications