தங்கத்தை விட்டு தள்ளுங்க.. புதிய உச்சத்திற்கு பறக்கும் வெள்ளி.. இப்போ பணத்தை போட்டால் லாபம் வருமா?
சென்னை: தங்கத்திற்குப் போட்டி போட்டும் வகையில் வெள்ளியும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி ஒரு கிலோ ரூ.3000 உயர்ந்து, ரூ.1.53 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் வெள்ளியில் முதலீடு செய்யலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர். உண்மையில் வெள்ளி முதலீடு அதிக லாபத்தைத் தருமா.. இதில் இருக்கும் சிக்கல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. இந்திய முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாகத் தங்கம் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்தாலும் கூட ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அது கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. இந்தளவுக்கு உச்சத்திற்குப் போய்விட்டதால், மக்கள் வேறு ஆப்ஷன்களை யோசிக்கிறார்கள்.

வெள்ளி முதலீடு
குறிப்பாகப் பல முதலீட்டாளர்கள் வெள்ளி, அதிலும் ETFs முறையில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கிறார்கள். இந்தப் பண்டிகைக் காலத்தில் சிறந்த தேர்வாக வெள்ளி முதலீடு இருக்குமா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது இது தொடர்பாக 1 ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ரஜினி தாண்டாலே பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைக் கூறினார்.
இது தொடர்பாக ரஜினி தாண்டாலே மேலும் கூறுகையில், "வெள்ளி ETFகளில் நாம் சிப் முறையில் முதலீடு செய்யலாம். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போலத் தான் அது. ஆனால், ஈக்விட்டிகள் அல்லது கடன் பத்திரங்களுக்குப் பதிலாக, நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்கிறீர்கள்" என்றார். அதாவது வெள்ளி ETF நீங்கள் போடும் பணத்திற்கு இணையாக வெள்ளி வாங்கப்படும்.
சில்வர் ETF
தங்கத்தை போல இல்லாமல் வெள்ளியை வாங்கினால் அதைச் சேமிக்க இடம் அதிகம் தேவைப்படும். இதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெள்ளியை வாங்க முடியாது. ஆனால், ETF முறையில் முதலீடு செய்யும்போது வெள்ளியைச் சேமிக்கும் சிக்கல் மக்களுக்கு இல்லை. அது அவர்களின் டிமேட் கணக்கில் இருக்கும். தேவை ஏற்படும்போது அதை விற்றுக் கொள்ளலாம்.
வெள்ளியின் முதலீடு லாபத்தைத் தருமா என்பது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "தங்கத்திற்கு அடுத்து நமது நாட்டில் முக்கிய விஷேசங்களில் வெள்ளியைப் பயன்படுத்துவார்கள். சர்வதேச பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை காரணமாக வெள்ளி பக்கம் முதலீட்டாளர்கள் திரும்பியுள்ளனர். அதேநேரம் குறுகிய காலத்தில் வெள்ளி விலை எப்படிப் போகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால், சிப் முறையில் சீராக முதலீடு செய்து வந்தால் நல்ல லாபம் கிடைக்கவே செய்யும்" என்றார்.
தங்கம் vs வெள்ளி
தங்கத்திற்கும் வெள்ளிக்கும் இடையே சில பிரதான வேறுபாடுகள் இருக்கத் தான் செய்கிறது. தங்கத்தைப் பொறுத்தவரை அதன் பயன்பாடு குறைவு. நகை செய்து போடலாம்.. தொழில்துறையில் அதற்கான தேவை ரொம்பவே குறைவு. ஆனால், வெள்ளி அப்படி இல்லை நகை, பாத்திரங்களைத் தாண்டி தொழிற்துறையில் அதற்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது.
மேலும், தங்கம் பாரம்பரியமான பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. இதனால் தங்கம் விலை நிலையாக இருக்கும். பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது. பணவீக்கத்திற்கு எதிராகப் பாதுகாப்பைக் கொடுக்கும். அதேநேரம் வெள்ளிக்கும் நாம் அதைச் சொல்ல முடியாது. வெள்ளியை எந்தவொரு உலக நாடும் வாங்கி சேமிப்பது இல்லை. மேலும், தொழிற்துறை பயன்பாடு வெள்ளியில் அதிகம் இருப்பதால் அங்கு மந்தநிலை ஏற்பட்டால் வெள்ளி விலை பட்டென சரியும்.
ஒரே சிக்கல்
இதனால் வெள்ளி அதிக ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும்.. அதாவது எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அவ்வளவு வேகமாகச் சரியலாம். எனவே, வெள்ளி நல்ல முதலீடு போலத் தோன்றினாலும் அதில் ரிஸ்க் அதிகமாகவே இருக்கிறது. ஆனால், இந்த ஆபத்துகளைச் சமாளிக்க முடியும். நீண்ட கால முதலீடாகவே வெள்ளியைப் பார்க்கிறேன் என்றால் அது ஒரு நல்ல ஆப்ஷனாகவே இருக்கிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications