2024இல் பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான்.. மோடியை வெல்ல முடியுமா? வாக்குகளை அள்ள முடியுமா?
சென்னை: கர்நாடக மண்ணில் பாஜகவை காலி செய்திருக்கிறது காங்கிரஸ். அதனால் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் புதிய உற்சாகத்தைப் பெற்றுள்ளன.
இதே வேகம் நீடித்தால், பாஜகவை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திவிட முடியும் என்கிறார்கள் சில அரசியல் ஆலோசகர்கள்.
குறிப்பாக "கூட்டணிகளை ஒருங்கிணைப்பதில், முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியைவிட மிகச் சாமர்த்தியமாகச் செயல்படுகிறார் ஸ்டாலின். இவர் ஒரு வலுவான தலைவர்" என்கிறார் மோடி ஆதரவாளரான ரவீந்திரன் துரைசாமி.

2024தேர்தலில் பாஜகவை வீழ்த்திவிடுமா காங்கிரஸ்? அது எளிதான காரியமா? என்ற கேள்வியைச் சிலரிடம் முன்வைத்தோம்.
முதலில் நம் அழைப்பை ஏற்றவர் பத்திரிகையாளர் ரகு, "வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைவரும் தங்களுக்குள் இருக்கின்ற கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்று சேர முன்வரவேண்டும். அந்த எண்ணம் அனைத்து கட்சிகள் மத்தியில் இப்போது உருவாகி உள்ளதை நம்மால் ஊகிக்க முடிகிறது.
உதாரணமாக, அரவிந்த் கெஜ்ரிவால் யாருடனும் ஒட்டாமல் இருந்தார். காங்கிரஸ் கட்சியுடன்கூட அவருக்கு ஒரு இணக்கமான உறவு இல்லை என்றே சொல்லவேண்டும். ஆனால், அவரது அந்த மனநிலையில் இப்போது ஒரு மாற்றத்தை உணா முடிகிறது.
இப்போது மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மோடியை எதிர்க்கவில்லை என்றால், இனி வரும் காலங்களில் நமக்கு ஒரு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்று பலரும் நினைக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு பக்கம் மம்தா பானர்ஜியின் உறவினருக்கு மத்திய அரசு சிபிஐ மூலமாக நெருக்கடிக் கொடுத்து வருகிறது.

அதேபோல் கெஜ்ரிவாலின் வலது கை இப்போது சிறையில் இருக்கிறார். மாநில ஆளுநர்கள் மூலமாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு தொடர் நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இதை எல்லாம் மனதில் கொண்டு பார்க்கும்போது பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பல மாநிலக் கட்சித் தலைவர்களின் நிலைமை என்ன ஆகும் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது.
ஆனாலும் அப்படி ஒன்று சேர்வது எளிதானதல்ல; ஏனென்றால் மம்தா காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தில் ஆதரிக்கத் தயார் என்கிறார். அதே சமயம் தங்களது மாநிலத்தில் காங்கிரஸ் தனது கட்சியை எதிர்க்கக் கூடாது என்கிறார். இது எப்படி சாத்தியம்?
அதேபோல் ஒடிசாவில் பாஜக எதிர்ப்பு இல்லை. அங்கே பாஜக வலுவாக இல்லை. அதனால் பாஜகவுடன் ஒரு மென்மையான போக்கை நவீன் பட்நாயக் கடைப்பிடித்து வருகிறார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பாஜகவை எதிர்த்துப் பேசுவதே இல்லை. ஏனெனில் பாஜக அந்த மாநிலத்தில் பெரிய அளவுக்குக் கால் ஊன்றவில்லை. ஆகவே மோடியுடன் ஒரு சுமுக உறவை அவர் கடைப்பிடிக்கிறார்.
ஆக, இப்படி கொஞ்சம் நெருக்கடிகளும் உள்ளன. இன்னொரு பக்கம் மோடிக்கு எதிராக வலுவாக ஒன்றிணைய முயற்சியும் நடக்கிறது. அதை மறுப்பதற்கு இல்லை" என்கிறார்
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன், "உண்மையில் வடமாநிலங்களில் பாஜகவுக்குப் பெரிய பலம் இல்லை. பாஜகவைப் பற்றி மிகைப்படுத்திப் பேசுகிறார்கள்.

கர்நாடகாவில் காங்கிரஸ் சுயமாக ஆட்சியை அமைத்துள்ளது. அதேபோல் திமுக தமிழ்நாட்டில் சுயமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் சுயமாக ஆட்சியை அமைத்துள்ளார்கள்.
அப்படிப் பார்த்தால், பாஜக எத்தனை மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கிறார்கள் சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்து 2 மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் அவர்கள் பலமாக இல்லை.
தமிழ்நாட்டில் திமுக அமைத்துள்ள ஒரு கூட்டணியைப் போல ஒன்றியத்தில் அன்றே ஒரு கூட்டணி அமைந்திருந்தால், பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருக்காது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததற்கு முதல் காரணம், பாஜக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு. அந்தக் கோபத்தைச் சரியான முறையில், சரியான வழியில் காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பாஜக கண்டு கொள்ளவே இல்லை என்பதைப் பிரச்சாரமாக முன்வைத்தார்கள். அது நல்ல பலனைக் கொடுத்தது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வலுவாக உள்ளது. வரும் 2024இல் பாஜக இங்கே 70 இடங்களைப் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அங்கே விரைவில் ராமர் கோயிலை திறக்கப் போகிறார்கள். கிராம அளவில் கட்சியை அவர்கள் வலுவாக மாற்றி இருக்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை அங்கே ஊன்றிவிட்டார்கள். மற்றொரு பக்கம் குடும்பத்திற்கு 5 கிலோ அரசி கொடுக்கும் திட்டமும் நடக்கிறது. ஆகவே உத்தரப் பிரதேசம் வேண்டுமானால் பாஜகவுக்கு உதவலாம்.
ஆனால், பீகாரில் அப்படி இல்லை. நிதிஷ்குமாரும் அகிலேஷ் யாதவும் 2 நாடாளுமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிவிட்டார்கள் என்பதால், அவர்கள் மொத்த வலுவையும் இழந்துவிட்டார்கள் எனச் சொல்லமுடியாது. இன்னும் அந்த இரு கட்சிகளும் அம்மாநிலத்தைப் பொறுத்தவரை வலுவான கட்சிதான். மீண்டும் இவர்கள் பழைய பலத்துடன் வர முடியும். அதில் சந்தேகம் இல்லை.
மத்தியப் பிரதேசமும் அப்படித்தான். தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்டாயம் வெல்லும் எனக் கர்நாடக தேர்தலுக்கு முன்பே கணிப்புகளை நடத்தியவர்கள் சொன்னார்கள். ராஜஸ்தானில் சச்சின் பைலட் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.

ஏனென்றால், கர்நாடகா வெற்றி அவரை அப்படி நடந்துகொள்ள வைக்கும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளைக் கையில் எடுத்து காங்கிரஸ் வியூகம் அமைத்துத் தேர்தலை எதிர்கொண்டால் கட்டாயம் இந்த பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் வெல்லும்.
அடுத்து மம்தா சொல்லும் புள்ளிக்கு வருவோம். நாங்கள் எங்கு எல்லாம் பலமாக இருக்கின்றோமோ அங்கெல்லாம் அதிக வாய்ப்பைக் கொடுங்கள் என்று அவர் கேட்கவேண்டும். அதைவிட்டுவிட்டு, எங்களுக்கு முழு வாய்ப்பைக் கொடுங்கள் என்று கேட்கக் கூடாது.
ஜக்கிபூர் பக்கத்தில் ஷாக்ருதி என்று ஒரு இடம் உள்ளது. அங்கே நான் உதவி ஆட்சியராக பணியாற்றி இருக்கிறேன். அங்கே சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இவர்களின் முழு ஆதரவு மம்தாவுக்குத்தான் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. முர்ஷிதாபாத், மால்தா ஆகிய இரண்டு மாவட்டங்களில் காங்கிரஸ் இன்றும் முழு உயிர்ப்புடன் உள்ளது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, மம்தா திட்டமிட வேண்டும். இருக்கிற 42 இடங்களில் 34 இடங்களை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். மீதி உள்ள 8 இடங்களைக் காங்கிரசும் சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் எடுத்துக் கொள்ளட்டும் என்று அவர் ஒரு சமரசத்திற்கு வரவேண்டும். இப்படி ஒரு உடன்பாடு ஏற்பட்டால், 42 இடங்களிலும் பாஜக ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாது.
இப்போதும் இந்தியாவில் பெரிய கட்சியாகக் காங்கிரஸ்தான் உள்ளது. கர்நாடக மாநில பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்திருக்க வேண்டும். சந்திரசேகரராவை அழைத்திருக்க வேண்டும். ஒடிசா முதல்வர் பட்நாயக்கையும் அழைத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர்.
வரும் காலங்களில் அவர்கள் கொஞ்சம் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்துகொண்டால், பாஜகவை எளிதாக வீழ்த்திவிட முடியும்.
பாஜக நகராட்சி தேர்தல் வரை மோடியை முன்வைக்கத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு மோடியின் பிம்பம் மங்கத் தொடங்கிவிட்டது. வரும் காலத்தில் பாஜகவுக்கு இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்" என்கிறார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோபண்ணா, "கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு உத்வேகத்தை வழங்கி இருக்கிறது. மிகப் பெரிய நம்பிக்கை எங்களுக்கு இந்த வெற்றி அளித்துள்ளது என்பது உண்மை.
அதே நேரத்தில் கர்நாடகா பதவியேற்பு விழாவுக்கு சில தலைவர்களை அழைக்கவில்லை எனச் சிலர் சொல்வது சரியான வாதம் இல்லை. நாங்கள் ஏற்கெனவே கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளை அழைத்துள்ளோம். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா அல்ல.

பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணிக்கு நிதிஷ்குமார் முயற்சி எடுக்கிறார். குறைந்தபட்ச திட்டம் வகுக்கிறார். மோடிக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த அவர் பல கட்சிகளைப் பார்த்துப் பேசி வருகிறார். அவரது திட்டத்திற்குக் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒத்துழைப்பு அளிக்கும்.
எங்களைப் பொறுத்தளவில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் ராகுல் காந்தி மிகத் தீவிரமாக இருக்கிறார். பாரத் ஜோடா யாத்திரை அதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 51 இடங்களில் அந்த யாத்திரை சென்றது. 31 இடங்களில் அதனால் காங்கிரஸ் வென்றுள்ளது. 4 கிலோமீட்டர் நடந்தே சென்றுள்ளார். இந்த நாட்டில் பிளவுபட்ட மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக முயற்சி எடுத்திருக்கிறார். காலப்போக்கில் பாஜகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை ஒருங்கிணைப்போம்.
தென்மாநிலங்களில் மட்டும் 130 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் கடந்த முறை நடந்த தேர்தலில் கர்நாடகாவில் மட்டும் பாஜக 25 இடங்களில் வென்றது. அந்த வெற்றி இந்த முறை கிடைக்காது என்பது உறுதி. ஆந்திராவில் 3 சீட்டுகள் பாஜகவுக்குக் கிடைத்தது. அவற்றையும் வரும் தேர்தலில் உடைப்போம்.
இதில் நாங்கள் 52 இடங்களில் நின்றோம். அதில் 44 இடங்களில் வென்றோம். திமுக உட்படக் கூட்டணிக் கட்சிகள் பல இடங்களில் முன்பே வென்றுள்ளன. ஆக, தென்மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. அதில் கூடுதலாக இப்போது கர்நாடகாவும் இணைந்துள்ளது.
திமுகவின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி மிகக் கட்டுக்கோப்பாக இருக்கிறது. அதற்கு இன்னும் கூடுதல் பலம் வரும் தேர்தலில் கிடைக்கும் என்பது நிஜம். இவை அல்லாமல் வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளைக் காங்கிரஸ் ஒருங்கிணைத்து வலுவான ஒரு சக்தியாக வரும் 2024 தேர்தலில் இருக்கும்" என்கிறார்












Click it and Unblock the Notifications