குடும்ப தலைவிகளே.. ரூ.1000 உரிமை தொகை.. உங்களுக்கு கிடைக்குமா? 6ம் தேதி முதல் தெரியவரும்
சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் இதுவரை 75 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விண்ணப்பம் அளித்த குடும்பத் தலைவிகள் விவரம் சரி பார்க்கும் பணி 6-ந் தேதி தொடங்க உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இந்நிலையில் தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் ரூ.1,000 உரிமைத் தொகை அவரவர் வங்கி கணக்கில் மாதம் தோறும் செலுத்தப்பட உள்ளது

மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த ஜூலை 20-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினார்கள். முதல் கட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி கடந்த ஜூலை 24-ந் தேதி தொடங்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி (நாளை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி வருகிற 6-ந் தேதி தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே ரூ.1,000 உரிமைத் தொகை பெறுவதற்கு தமிழகம் முழுவதும் இதுவரை 1 கோடிக்கு மேல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 75 லட்சம் விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 33 ஆயிரத்து 326 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதற்கான மென்பொருள் (சாப்ட்வேர்) உதவியுடன் சரிபார்க்கப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,000 உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மென்பொருள் எப்படி குடும்ப தலைவகளின் தகுதிகளை கண்டுபிடிக்கும் என்பது குறித்து தெரியவில்லை. குறிப்பிட்ட குடும்ப தலைவிகளின் ஆதார் எண்ணை வைத்து அவரது விவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்பதால் எளிதாக அரசால் குடும்ப தலைவிகளை தேர்வு செய்ய முடியும். தகுதியான குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படும் சாப்ட்வேர் எப்படி செயல்படும் என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரியவரலாம். இதனிடையே செப்டம்பர் 15-ந் தேதி முதல் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.
யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்கும்: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர்கள் உள்ளிட்டடோர் இதனால் பயன் அடைய போகிறார்கள். ஆனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது.
ரூபாய் 2.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள், குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்,மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு மாதம் 1000 ரூபாய் கிடைக்காது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களுக்கும் உரிமை தொகை கிடைக்காது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு 1000 உரிமை தொகை கிடைக்காது. ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உரிமை தொகை கிடைக்காது.












Click it and Unblock the Notifications